கர்நாடகாவில் இருந்து சென்னைக்கு லாரி மற்றும் கார்களில் கடத்தப்பட்ட மதுபானங்கள் பறிமுதல்
சென்னை அருகே கர்நாடகாவில் இருந்து லாரி மற்றும் 3 கார்கள் மூலம் கடத்தி வரப்பட்ட 3,327 மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
சென்னையில் போதைப் பொருட்களை வைத்திருப்பவர்கள், சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி விற்பவர்களை கண்டறிந்து கைது செய்ய சென்னை காவல் ஆணையர் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல் ஆய்வாளர் தலைமையில் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன தணிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த 30 ஆம் தேதி திருமங்கலம் பகுதியில் வீட்டில் வைத்து மதுபாட்டில்களை விற்பனை செய்த நேபால் நாட்சைச் சேர்ந்த தனுஷ்பிந்தாஸ் என்பவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 1, 398 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டு கள்ளச்சந்தை மூலம் அதிக விலைக்கு விற்பனை செய்து வருவது தெரியவந்தது.
இந்நிலையில் அரும்பாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக கர்நாடக மாநிலத்தில் இருந்து லாரி மற்றும் காரில் மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக காவல் ஆய்வாளர் சரவணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் காவல் துறையினர் பூந்தமல்லி நெடுஞ்சாலை நடுவங்கரை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு கண்டெய்னர் லாரி மற்றும் 3 கார்களை மடக்கிப் பிடித்தனர்.
சுதாரித்துக் கொண்ட குற்றவாளிகள் வாகனங்களில் இருந்து தப்பியோடிவிட அண்ணா நகர் மேற்கு பகுதியில் வசித்துவரும் நேபால் நாட்டைச் சேர்ந்த சோனு (39) என்பவர் மட்டும் காவல் துறையினரிரம் பிடிபட்டார்.
மேலும், மடக்கிய வாகனங்களை போலீசார் சோதனை செய்தபோது அதில் 60 பெட்டிகளில் 2,880 மதுபாட்டில்களும் 50 பெட்டிகளில் 477 பீர் பாட்டில்களும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் அந்த கார்களில் போலி judge, govt of india போன்ற ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு பத்திரிக்கையாளர்கள் அடையாள அட்டையும் கைப்பற்றப்பட்டது. இதை வைத்தே வழிநெடுகிலும் அவர்கள் பயணித்து வந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக அரும்பாக்கம் காவல் துறையினர் சோனு என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு அதன் அறிக்கையை மதுவிலக்கு அமலாக்கத் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.