தங்க அரண்மனை, 7000 கார்கள், ஒரு நாள் ரூ.5,277 கோடி - ஆடம்பர வாழ்வில் திளைக்கும் சுல்தான்!
புருனே நாட்டு சுல்தான் ஹசனல் போல்கியாவின் ஆடம்பர வாழ்க்கை குறித்த தகவல்.
புருனே சுல்தான்
'புருனே' கடந்த 1967ம் ஆண்டு தனி நாடாக உருவானது . இது உலகின் 5வது பணக்கார நாடாகும். புருனே தென்கிழக்கு ஆசியாவில் போர்னியோ தீவில் அமைந்துள்ள ஒரு குட்டி நாடாகும்.
இந்த நாட்டின் தலைநகர் பெயர் பந்தர் செரி பெகவான். இதுதான் பெரிய நகரமும் கூட. பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயு மூலம் புருனேயில் செல்வம் கொழிக்கிறது. இங்கு ஒரு நாளைக்கு 1 லட்சத்து 67 ஆயிரம் பீப்பாய் கச்சா எண்ணெயும், 25.3 மில்லியன் கனமீட்டர் திரவ எரிவாயும் உற்பத்தியாகிறது. 1967ம் ஆண்டு புருனே தனி நாடாக உருவான பின்னர் அந்நாட்டின் சுல்தானாக (மன்னராக) பொறுப்பேற்றவர் 'ஹசனல் போல்கியா முயுசுதீன் வாதுலா. அன்று முதல் தற்போதுவரை 55 ஆண்டுகளாக அந்த பதவியில் நீடித்து வருகிறார். புருனே நாட்டின் மன்னர், பிரதமர், நிதி மந்திரி, வெளியுறவு மந்திரி, ராணுவ மந்திரி, ராணுவ தலைமை தளபதி, காவல் துறையின் தலைவர் எல்லாம் இவர்தான்.
ஒரு நாளைக்கு அவரது வருவாய் மட்டும் ரூ.5,277 என கூறப்படுகிறது. இவரது மொத்த சொத்து மதிப்பு என்பது இந்திய ரூபாயில் 2.3 லட்சம் கோடி ரூபாய் என கூறப்படுகிறது. புருனே சுல்தானுக்கு 3 மனைவிகள் மூலம் 5 மகன்களும், 7 மகள்களும், 18 பேரப்பிள்ளைகளும் உள்ளனர். ஹசனல் போல்கியா வசிக்கும் இஸ்தானா நூருல் இமான் அரண்மனை உலகில் உள்ள அரண்மனைகளிலேயே மிகப்பெரியது. 'கின்னஸ் சாதனை' புத்தகத்தில் இந்த அரண்மனை இடம் பெற்றுள்ளது.
ஆடம்பர வாழ்க்கை
அரண்மனையின் மேற்கூரை முழுவதும் 22 கேரட் தங்கத்தால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரண்மனையில் மொத்தமாக 1, 788 அறைகள் உள்ளன. 275 ஆடம்பர குளியலறைகளும், 5 நீச்சல் குளங்களும் உள்ளன.
பூலோக சொர்க்கம் போல் ஜொலிக்கும் இந்த அரண்மனையின் தற்போதைய மதிப்பு ரூ.36 ஆயிரத்து 847 கோடி என்று கூறப்படுகிறது. ஹஸனல் போக்கியாவின் அரண்மனையில் உள்ள கேரேஜில் 600 ரோல்ஸ்ராய்ஸ், 450 பெராரி, 380 பென்ட்லேஸ் உள்பட 7000 கார்கள் அணிவகுத்து நிற்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இவற்றின் மொத்த மதிப்பு 5 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.41 ஆயிரம் கோடி). இவரது ரோல்ஸ்ராய்ஸ் கார்களில் ஒன்று தங்கத்தால் இழைக்கப்பட்டது. புருனே சுல்தான் தனது சொந்த பயணத்துக்கென்றே தனியாக போயிங்-747, போயிங்-767, ஏர்பஸ்-ஏ340 என்று 3 பெரிய விமானங்கள் மற்றும் 6 சிறிய விமானங்களை வைத்திருக்கிறார்.
இதில் 545 கோடி ரூபாய் மதிப்புள்ள போயிங்-747 ரக விமானத்தை 'பறக்கும் அரண்மனை' என்றே சொல்லலாம். இந்த விமானத்தின் உள்பகுதியில் மட்டும் ரூ.645 கோடி செலவில் அலங்காரம் (இன்டீரியர்) செய்யப்பட்டு உள்ளது. இதுதவிர 2 ஹெலிகாப்டர்களும் அவரிடம் உள்ளன. புருனே சுல்தான் ஒரு முறை தனது மகளுக்கு, ஏர்பஸ்-340 ரக விமானத்தை பிறந்தநாள் பரிசாக வழங்கினார். புருனே சுல்தான் ஒரு முறை முடி வெட்டிக் கொள்ள 18 லட்சம் ரூபாய் செலவு செய்கிறார்.
புருனே மன்னரின் ஆடம்பர வாழ்க்கை குறித்து பேசுவது அந்த நாட்டில் சட்டப்படி குற்றம் ஆகும். இதனால் அதுபற்றி மக்கள் யாரும் வாயே திறப்பது இல்லை. மேலும் அங்கு மக்களும் வசதியாகவே இருப்பதால் எதையும் கண்டுகொள்வது இல்லை. புருனே மக்களுக்கும், அங்கு வசிக்கும் வெளிநாட்டினருக்கும் சுல்தானைப் பற்றி நல்ல அபிப்பிராயமே உள்ளது. அவர் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கிறார்கள்.