அழகை கெடுக்கும் குதிகால்வெடிப்பு உள்ளதா? கவலை வேண்டாம்... இதை ட்ரை பண்ணாலே போதும்!

health tips beauty lifestyle
By Nandhini Dec 29, 2021 07:35 AM GMT
Report

அழகு என்பது வெறும் முகத்தில் மட்டும் இல்லை. தலை முதல் கால் வரை எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் வைத்துக் கொள்வது தான் உண்மையான அழகு. கால்களின் அழகை கெடுக்கும் வகையில் வருவது தான் குதிகால் வெடிப்பு.

கால்களின் அழகை கெடுக்கும் வகையில் வருவது தான் குதிகால் வெடிப்பு. இந்த குதிகால் வெடிப்பு வருவதற்கு பலரும் வறட்சி மட்டும் தான் காரணம் என்று நினைக்கிறோம். ஆனால் வறட்சி மட்டுமின்றி, வேறுசில காரணங்களும் குதிகால் வெடிப்பை ஏற்படுத்தும்.

கால் சருமத்தின் உலர்ந்த தன்மை, நீண்ட நேரம் நிற்பது, நடப்பது, தோலின் வளையும் தன்மை குறைவாக இருத்தல், குதிக்கால் மூடப்படாத செருப்புகளை அணிதல் போன்றவை குதிகால் வெடிப்பின் முக்கிய காரணங்களாகும்.

நாம் அருந்தும் நீரின் அளவு குறைதல், குளிரான கால நிலை, தைரொயிட் சுரப்பி நோய்கள், நீரிழிவு நோய் போன்றவையும் உங்கள் கால்களில் குதிகால் வெடிப்பை ஏற்படுத்தும்.

உடல் எடை அளவுக்கு அதிகம் இருந்தாலும், குதிகால் வெடிப்பு வரும். நீரிலேயே நீண்ட நேரம் இருந்தால், அதனால் கால்கள் அதிகம் நீரில் ஊறி, சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய்ப்பசை அனைத்தும் வெளியேறிவிடும்.

குதிகால் வெடிப்பை சரிசெய்ய என்ன செய்யலாம் என்று பார்ப்போம் -

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறுக்கு கடினமான தோலை மென்மையாக்கும் தன்மை உள்ளது. தினமும் எலுமிச்சை சாறு கலந்த நீரில் கால்களை 10 நிமிடங்கள் ஊற வைத்து எடுத்து பின் நன்கு கால்களை தேய்த்து கழுவினால் குதிகால் வெடிப்புகள் நாளடைவில் மறையும்.

கற்றாழை ஜெல்

கால்களை வெது வெதுப்பான நீரில் கழுவி சுத்தம் செய்து கொண்டு கற்றாழை ஜெல்லை கால்களில் தடவி பின் கால் உரையை மாட்டிக் கொண்டு இரவில் தூங்க வேண்டும். இப்படி செய்தால் குதிகால் வெடிப்பிலிருந்து குணம் பெறலாம்.

வாழைப்பழம்

வாழைப்பழத்தை நன்கு மசித்து, அதனை குதிகால் வெடிப்பின் மீது தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தாலும், வெடிப்பு மறையும்.

ஆலிவ் ஆயில்

தினமும் இரவில் படுக்கும் போது, ஆலிவ் ஆயிலை பாதங்களில் தடவி 15-20 நிமிடம் நன்கு மசாஜ் செய்து படுத்தால், சீக்கிரம் குதிகால் வெடிப்பு போய்விடும்.

பேக்கிங் சோடா

3 மேசைக் கரண்டி பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து கால்களை 15 நிமிடங்கள் ஊற வையுங்கள். பின் சொர சொரப்பான கல்லைக் கொண்டு கால்களை நன்கு தேய்க்க குதிகால் வெடிப்பு நீங்கி, அழுக்கு, இறந்த செல்களும் நீங்கும்.

மஞ்சள் தூள், துளசி

துளசி இலைகளை அரைத்து, அதில் கற்றாழை ஜெல் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, அதனை பாதங்களில் தடவி 20-25 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதன் மூலமும் நல்ல பலன் கிடைக்கும்.