தலைமுடி அதிகமாக கொட்டுகிறதா? கவலை வேண்டாம்... இதோ இயற்கை வைத்தியம்...
நாம் அனைவருக்குமே தலை முடி நீளமாகவும், அடர்த்தியாகவும் இருக்க வேண்டும் என்ற ஆசை அதிகமாகவே இருக்கும். ஆனால் தலைமுடியில் ஏற்படும் சில பிரச்சினைகளால் முடி உதிர்வு உண்டாகிறது.
பொடுகு தொல்லை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்ற காரணங்களால் முக்கியமாக முடி உதிர்கிறது. இந்த பிரச்சினை பெண்களை அதிகமாக தாக்குவதில்லை. ஆனால் ஆண்களுக்கு தலையில் முடி உதிர்ந்து சொட்டை விழுகின்றது.
இந்த பிரச்சினைகளைப் போக்க இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.
முடி கொட்ட காரணங்கள்
ஹார்மோன் சமநிலையின்மை
அதிக அளவு மாசு
பரம்பரை பிரச்சனை
மன அழுத்தம்
தூக்கமின்மை
தண்ணீர் ஊட்டச்சத்துக் குறைபாடு
தலைமுடி பிரச்சினையிலிருந்து விடுபட்டு, தலை முடி செழித்து வளர இதோ சில வழிமுறைகள் -
செம்பருத்திப் பூ
செம்பருத்திப் பூவை எடுத்து அரைத்து, அதனுடன் ஆமணக்கு எண்ணெய் சிறிதளவு சேர்த்து இரண்டையும் நன்கு கலந்து, மயிர்க்கால்களில் படும்படி நன்கு தேய்த்து, அப்படியே 20 நிமிடங்கள் ஊறவைத்து பின் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். இது முடி உதிர்வதை தடுக்கும் மற்றும் பொடுகு தொல்லை, நரைமுடி போன்றவற்றையும் போக்கும்.
வடிகஞ்சி
சாதம் வடித்த நீருடன் (வடிகஞ்சி) சிகைக்காய் பவுடரைக் கலந்து தேய்து வாரம் இருமுறை குளித்துவர, முடி அடர்த்தியாக வளரும்.
ஆலிவ் எண்ணெய்
ஆலிவ் எண்ணெய் சிறிது சூடாக்கி, தினசரி தேய்த்து 6 மணி நேரம் கழித்து குளித்துவிடவும். முடி பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் வளரும்.
சத்தான ஆகாரங்கள்
கூந்தல் வளர்ச்சிக்கு உடல் போஷாக்கு மிகமிக முக்கியம். விதவிதமான கூந்தல் தைலங்களை உபயோகிப்பதைவிட சத்தான ஆகாரங்கள் கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றது.
கறிவேப்பிலை
கறிவேப்பிலை உணவில் தாராளமாய் சேர்த்துக்கொள்ளுங்கள் தலைமுடி செழிப்பாய் வளரும்.
வேப்பிலை
வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.
வெந்தயம்
வெந்தயத்தை தண்ணீர்விட்டு விழுதாய் அரைத்து தலையில் தேய்த்து, அரைமணிநேரம் வைத்திருந்து குளித்துவிடுங்கள். அடிக்கடி பயன்படுத்திவர, முடி வளரும், முடி கொட்டுதல் நீங்கும்.