தினமும் சீரகத்தண்ணீரை குடித்து வந்தால் உடலில் எவ்வளவு மாற்றம் ஏற்படும்ன்னு தெரியுமா?

By Nandhini Apr 25, 2022 01:46 PM GMT
Report

அன்றாடம் நாம் சமையல் அறையில் இருக்கும் அஞ்சறைப் பெட்டியில் மிக முக்கியமான ஒன்று சீரகம். பல்வேறு உணவுகளில் நாம் அதைப் பயன்படுத்துகிறோம்.

உடலிலுள்ள தேவையற்ற கொழுப்பினை கரைக்கக்கூடிய பொருளாக நெடுங்காலம் சீரகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. செரிமானத்தை சீராக்கி, உடலிலுள்ள நச்சுப்பொருள்களை அகற்றுவதில் சீரகம் மிக முக்கிய பங்காற்றுகிறது.

தினமும் காலையில் எழுந்ததும் சீரகம் கலந்த தண்ணீரை குடித்து வருவது முகம், கூந்தல் அழகுக்கும் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். மேலும் பல்வேறு உடல்நல பிரச்சினைகளுக்கு இயற்கை தீர்வாகவும் அமைகிறது.

சீரகத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆறிய பின் குடிப்பது நல்லது.

சீரக தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகளைப் பற்றி பார்ப்போம்

உடல் எடையை குறைய

உடல் எடையை குறைப்பதில் சீரகத் தண்ணீருக்கு முக்கிய பங்கு உண்டு. காரணம் சீரக தண்ணீரில் கலோரிகள் மிகக் குறைவு. ஒரு டீஸ்பூன் ஜீரகத்தில் 7 கலோரிகள் மட்டுமே உள்ளது. எனவே நீங்கள் இந்த சீரகத் தண்ணீரை குடித்தால் உங்கள் தினசரி கலோரி அளவை பற்றி நீங்கள் கவலைப்படாமல் இருக்கலாம்.

பசியின்மை

சீரக தண்ணீர் குடிப்பது பசியை தூண்ட உதவுகிறது. இது வயிற்றில் இரைப்பை சுரப்பை அதிகரிக்கிறது, கணைய சாறுகளின் சுரப்பை மேம்படுத்துகிறது, கல்லீரலில் பித்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, இந்த அனைத்தும் நடப்பதின் மூலமாக ஒரு நபருக்கு நல்ல பசியும், செரிமானம் ஏற்படுகிறது.

சருமத்திற்கு சிறந்தது

சீரக தண்ணீரில் கால்சியம், பொட்டாசியம், தாமிரம் உள்ளது. சீரகத் தண்ணீரை குடித்து வருவது மென்மையான சருமத்தை அடைய உதவுகிறது.

குழந்தைகளுக்கு

குழந்தைகளுக்கு சீரக நீர் கொடுத்துவந்தால் மந்த நிலை போவதோடு சுறு சுறுப்பாக வளையவருவார்கள். நினைவாற்றலும் அதிகரிக்கும். குழந்தைகளுக்கு கண்களில் எரிச்சல், கண்களில் அதிகமாக நீர் வடிந்தால் நல்லெண்ணையைச் சூடாக்கி நான்கு மிளகு, சீரகம் சேர்த்து தலைக்கு தேய்த்து குளிக்கவைத்தால் கண் உஷ்ணம், நீர் வடிதல் நிற்கும்.

மாதவிடாய் காலங்களில்

பெண்கள் மாதவிடாய் காலங்களில் வயிறு வலி அண்டாமல் இருக்க சீரக நீர் பெரிதும் உதவுகிறது. தலைச்சுற்றல், வாந்தி போன்ற உணர்வு வந் தால் கால் டீஸ்பூன் சீரகத்தை வாயில் போட்டு உமிழ்நீரோடு கலந்து நன்றாக மென்று சாப்பிடலாம். சீரகம் விதைகளில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஸ்பாஸ்மோடிக் எதிர்ப்பு பண்புகள் கொண்டது. இது உங்கள் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியைக் குறைக்க உதவுகிறது.

இரத்த அழுத்தம்

சீரகத்தில் அதிக பொட்டாசியம் உள்ளடக்கம் இருப்பதால், உயர் இரத்த அழுத்தத்திற்கு சிகிச்சையளிக்க சீரக தண்ணீர் ஒரு சிறந்த தீர்வாகிறது. சீரக தண்ணீரை குடிப்பதால் உடலில் உள்ள உப்பை சமநிலை படுத்துவதின் மூலம் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.