சிறுநீரகக் கற்களை அடியோடு வெளியேற்ற வாழைத்தண்டு சூப்

lifestyle-health
By Nandhini Dec 13, 2021 12:06 PM GMT
Report

சிறுநீரக கற்கள் விரைவில் கரையவும், குறைந்தது வாரத்திற்கு ஒரு முறையாவது வாழைத்தண்டு ஜூஸ் குடிக்க வேண்டும்.

வாழைத்தண்டு பல நோய்களுக்கு மகத்தான மருந்தாக இருப்பது நம்மில் பலருக்குத் தெரியும். ஆனால், நமக்குத் தெரியாத பல மருத்துவ குணங்களை வாழைத்தண்டு கொண்டிருக்கிறது.

சிறுநீரகத்தில் கல் உருவாவது இன்று மிக பரவலாகக் காணப்படும் நோய். அதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம், அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தடைபட்டு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றது.

சிறுநீரக கற்களை வெளியேற்ற மருந்துகளும், மருத்துவ முறைகளும் இருந்தாலும் நாம் உட்கொள்ளும் உணவு மூலமும் சிறுநீரக கற்களை வெளியேற்றலாம். வாழைத்தண்டுக்கு சிறுநீரக கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு.

வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால், ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

எப்படி வாழைத்தண்டு சூப் செய்யலாம் என்று பார்ப்போம் - 

தேவையான பொருட்கள்

  • வாழைத்தண்டு – 200 கிராம்
  • பாசிப் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
  • சின்ன வெங்காயம் – 10
  • சீரகம் – 1/2 டேபிள் ஸ்பூன்
  • வெள்ளைப் பூண்டு – 4
  • இஞ்சி – கட்டை விரல் அளவு
  • மிளகு – 1 ஸ்பூன்
  • கொத்த மல்லி – ஒரு கொத்து
  • உப்பு – தேவையான அளவு
  • மிளகு பொடி – தேவையான அளவு

செய்முறை

  • வாழைத்தண்டினை வட்ட வட்டமாக வெட்ட வேண்டும்.
  • வாழைத்தண்டினை வெட்டும் போது வரும் நாரினை, ஆட்காட்டி விரலில் சுற்றி வெளியே இழுக்க வந்து விடும். வாழைத்தண்டினை வட்டமாக வெட்டியதும் தண்ணீரில் போடவும்.
  • இல்லையெனில் வாழைத்தண்டு கறுத்து விடும். வட்டமாக வெட்டிய வாழைத்தண்டினை சிறுசிறு சதுரத் துண்டுகளாக வெட்ட வேண்டும்.
  • சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி நீளவாக்கில் வெட்ட வேண்டும். 
  • இஞ்சி, வெள்ளைப் பூண்டினை தோல் நீக்கி சதுரத் துண்டுகளாக வெட்ட வேண்டும்.
  • கொத்தமல்லி இலையை அலசி பொடியாக வெட்ட வேண்டும். பாசிப் பருப்பினை அலசி வைக்க வேண்டும்.
  • மிளகினை ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ள வேண்டும். 
  • குக்கரில் நறுக்கிய வாழைத்துண்டினை சேர்க்கவும்.
  • பின்னர் அதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயம், இஞ்சி, வெள்ளைப் பூண்டு, சீரகம், பொடித்த மிளகு, இரண்டு டம்ளர் தண்ணீர் மற்றும் தேவையான உப்பு சேர்த்து குக்கரினை மூடி அடுப்பில் வைக்க வேண்டும்.
  • ஒரு விசில் வந்ததும், சிம்மில் ஐந்து நிமிடங்கள் வைத்து, அடுப்பினை அணைத்து விடவும்.
  • குக்கரின் ஆவி அடங்கியதும் திறந்து தண்ணீரை வடித்து தனியே வைக்க வேண்டும். மீதமுள்ள வாழைத்தண்டு கலவையை மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • அரைத்த கலவை மற்றும் அவித்த முழு வாழைத்தண்டு ஆகியவற்றை, ஏற்கனவே வடித்து வைத்துள்ள வாழைத்தண்டு தண்ணீரில் கலந்து, தேவையான தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க விட்டு, கலவையை வடித்துக் கொள்ள வேண்டும்.
  • தற்போது சூப்பரான சூப் தயார்.