இரவு உணவு தாமதித்தால் உடல் எடை அதிகரித்து விடுமா? தெரிந்து கொள்ளுங்கள்...

காலை உணவினை அரசனை போலவும், மதிய உணவினை இளவரசரைப் போலவும், இரவு உணவினை ஏழையை போலவும் சாப்பிட வேண்டும் என்று நம் முன்னோர்கள் காலத்திலிருந்து கூறி வருகின்றனர். 3 வேளை உணவையும், எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பது போல எந்தெந்த நேரத்திற்குள் சாப்பிட வேண்டும் என்பது மிக முக்கியமான விஷயம்.

இதில் இரவு உணவை பொறுத்தவரை 7 முதல் 9 மணிக்குள் சாப்பிடுவதே சிறந்ததாகும். ஆனால் இன்றைக்கு பணி நிமித்தம் காரணமாக நாள் முழுவதும் ஓடிக்கொண்டு இருக்கிறோம். இரவு உணவை குறித்த நேரத்தில் சாப்பிட முடிவதில்லை. முறையற்ற நேரத்தில் பேரரசரைப்போலவே நம்மில் பலர் இரவு உணவை சாப்பிடுகிறார்கள்.

இந்த தலைகீழான நிலையால் ஏராளமான உடல் உபாதைகள் உடலில் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

குடல் புண்கள்

சாப்பிட்ட உடனேயே உறங்கச் செல்வோருக்கு இரைப்பையில் செரிமானத்திற்காக சுரக்கும் அமிலம் இரைப்பை குடலை நோக்கி மேலே ஏறும். இவ்வாறு தொடர்ந்து நடப்பதால் குடல் பகுதியில் புண்கள் உண்டாகின்றன. காலை நேரத்தில் நெஞ்செரிச்சல் ஏற்பட இதுவும் ஒரு காரணமாகும்.

தூக்கமின்மை

துரித உணவுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு தற்போது பரவலாக இருக்கிறது. அவற்றை போல எண்ணெய்யில் பொரித்த உணவுகளும் இரவுக்கு ஏற்றது கிடையாது. அவை செரிமானமாக அதிக நேரம் எடுப்பதால் நம்முடைய ஓய்வுக்கு மிகவும் தேவையான ஆழ்ந்த உறக்கத்தை கெடுத்துவிடும்.

செரிமானம்

முடிந்தவரை இரவு நேரத்தில் அசைவ உணவுகளை தவிர்ப்பது மிகவும் சிறந்தது. அவை செரிமானம் ஆக நீண்ட நேரமாக்கிவிடும்.

ஒவ்வாமை

தயிர், கீரை வகைகள் சார்ந்த உணவுகளை இரவில் தவிர்த்து விடுவது வல்லது. இவற்றை தவிர்த்துவிட்டால், சில ஒவ்வாமைகளில் இருந்து நாம் தப்பித்து விடலாம். அவற்றிற்கு மாற்றாக காய்கறிகள் அடங்கிய சூப் வகைகள், மிளகு, மஞ்சள் கலந்த பால் ஆகியவற்றை பருகலாம்.

உடல் பருமன்

நாம் உறங்கி இளைப்பாறும் நேரத்தில் தான் செரிமான உறுப்புகளும் ஓய்வெடுக்கும். முறையற்ற இரவு உணவால் அதற்கு வாய்ப்பளிக்காவிட்டால் உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விடும். 

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்