நரம்புகளை வலுவூட்டும் முருங்கை கீரை பருப்பு கூட்டு! சுவையாக செய்வது எப்படி?
முருங்கைக் கீரையில் விட்டமின் A,B,C ஆகிய உயிர்ச்சத்துக்களுடன் புரதச்சத்து, இரும்புச்சத்து மற்றும் சுண்ணாம்புச் சத்துக்களும் ஏராளமாய் உள்ளன.
இக்கீரை உடல் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் மிகவும் ஏற்றது. நரம்புகளை வலுவூட்டுகின்றது. பித்தத்தைத் தணிக்கும் ஆற்றல் இதற்குண்டு. பித்தம் சம்பந்தமான நோயால் வருந்துபவர்கள் இக்கீரையை அடிக்கடி சமைத்துச் சாப்பிடலாம். சிலருக்கு குரல் வளையில் வீக்கமும் வலியும் இருக்கும்.
அத்தகையவர்கள் இக்கீரையை சாப்பிட வீக்கமும் வலியும் குணமாகும். முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும்.
முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன.
தேவையான பொருட்கள்
முருங்கைக்கீரை - 2 கப்
வெங்காயம் - 4
துவரம்பருப்பு - 2 கப்
கடுகு, உளுந்து - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 6
சீரகம் - 1 ஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
செய்முறை -
குக்கரில் பருப்பு, மஞ்சள் தூள், சீரகம் சேர்த்து இரண்டு விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர், ஒரு கடாயில் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும் கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பிறகு, உப்பு கீரை சேர்த்து வதக்க வேண்டும்.
கீரை முக்கால் பாகம் வெந்தவுடன் அதில் வேக வைத்த பருப்பை ஊற்றி நன்கு வேக வைத்து இறக்க வேண்டும். சுவையான முருங்கைக்கீரை பருப்பு கூட்டு ரெடி.