சிறுநீரக கற்களை வெளியேற்றும் வாழைத்தண்டு கூட்டு - சுவையாக செய்வது எப்படி?
சிறுநீரகத்தில் கல் உருவாவது இன்று மிக பரவலாகக் காணப்படும் நோய். அதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம், அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தடைபட்டு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றது.
சிறுநீரக கற்களை வெளியேற்ற மருந்துகளும், மருத்துவ முறைகளும் இருந்தாலும் நாம் உட்கொள்ளும் உணவு மூலமும் சிறுநீரக கற்களை வெளியேற்றலாம்.
வாழைத்தண்டுக்கு சிறுநீரக கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு. வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால், ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தேவையான பொருட்கள் :
துவரம் பருப்பு - 1 கப்
வாழைத்தண்டு - 3 கப்
வெங்காயம் - 2
தக்காளி - 2
கடுகு, உளுத்தம் பருப்பு - 2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு , எண்ணெய் - தேவையான அளவு
அரைக்க :
துருவிய தேங்காய் - 4 ஸ்பூன்
சீரகம் - 2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5
சோம்பு - 1 ஸ்பூன்
தனியா - 1 ஸ்பூன்
செய்முறை :
அரைக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை அனைத்தையும் எண்ணெய் இல்லாமல், கடாயில் வறுத்து மிக்ஸியில் பேஸ்ட் போல் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர், ஒரு குக்கரில் பருப்பு மற்றும் நறுக்கிய வாழைத்தண்டு இரண்டையும் போட்டு சிறிதளவு உப்பு, மஞ்சள் சேர்த்து மூடி, 3 விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, அதில் கடுகு , உளுத்தம் பருப்பு சேர்த்து பொறிக்க விட வேண்டும். பின்னர், பெருங்காயம், காய்ந்த மிளகாய் சேர்க்க வேண்டும். அடுத்து, வெங்காயம் போட்டு நன்றாக வதக்க வேண்டும்.
பிறகு, தக்காளி, கறிவேப்பிலையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வதங்கிய பிறகு, வேக வைத்துள்ள பருப்பு மற்றும் வாழைத்தண்டு இரண்டையும் தண்ணீருடன் அப்படியே கொட்ட வேண்டும்.
அடுத்ததாக அரைத்த பேஸ்டுடன், உப்பு சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
தற்போது பச்சை வாசனை போகும் வரை தட்டு போட்டு மூடி கொதிக்க விட வேண்டும்.
சுவையான வாழைத்தண்டு கூட்டு தயார்.