தினமும் இந்த 5 சிறுதானியங்களை சாப்பிட்டு வந்தால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும்ன்னு தெரியுமா?
சிறுதானிய உணவுகள் நமது முன்னோர்களால் பெரும்பான்மையாக பயன்படுத்தப்பட்டது. உணவே மருந்து என்பதற்கு உதாரணமாக திகழ்வது தான் இந்த சிறுதானிய உணவுகளாகும்.
ஆனால் இன்று நாம் தான் நாகரீகம் என்ற பெயரில் பிட்சா, பர்கர் என்று மேலை நாட்டு ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிட்டு பழக்கப்படுத்திக் கொண்டோம்.
சிறுதானியங்களை அதிக அளவு உட்கொள்வது உடலில் உள்ளை டிரைகிளிசரைடுகளின் அளவினைக் குறைக்க உதவி செய்கிறது.
சிறுதானியங்கள் இரத்தத் தட்டை அணுக்கள் தடிமன் ஆவதைத் தடுத்து இரத்தத்தை திரவ நிலையிலேயே வைத்துக் கொள்ள உதவுகிறது. சிறு தானியங்களில் உள்ள தாவர ஊட்டச்சத்தானது பாலூட்டிகளின் குடலில் உள்ள லிக்னைனாக மாற்றுகிறது.
இவ்வாறு மாற்றப்படும் லிக்னைன் மார்பகப் புற்று நோயிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. சிறுதானியம் என்பது வரகு,சாமை, தினை, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு, சோளம் போன்ற தானிய வகைகள் ஆகும். சிறுதானியங்கள் பழங்கால மக்களின் உணவு பழக்கவழக்கத்தில் மிகப் பெரிய அங்கமாக திகழ்ந்துள்ளது.
இந்த தானியங்களில் மனித உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளது. இப்பொழுது நாம் உண்ணும் அரிசி மற்றும் கோதுமையை விட பல மடங்கு சத்து அதிகம் உள்ளது.
தினை :
தினை நார்ச்சத்து மிகுந்தது. இந்த நார்ச்சத்து (Fiber) மலச்சிக்கலை போக்க சிறந்தது. மேலும் இந்த உணவு வயிறு, குடல், கணையம் போன்ற உறுப்புகளை வலுப்படுத்தி, அவற்றில் உள்ள புண்களை ஆற்றும் சக்தியுடையது. உடல் தசைகளின் வலுவிற்கும், சரும மென்மைக்கும் மிகவும் அவசியமான புரதச்சத்து இதில் நிறைவாக இருக்கிறது.
சாமை:
சாமையில் மற்ற சிறு தானியங்களைக் காட்டிலும் அதிகளவு இரும்புச்சத்து (Iron)இருப்பதால் ரத்தசோகை வராமல் தடுக்கிறது. சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவும் நார்ச்சத்து சாமையில் 7 மடங்கு அதிகமாக இருக்கிறது.
குதிரைவாலி:
வாலரிசி என்றழைக்கப்படும் குதிரைவாலி மற்ற சிறுதானியங்களை விட மிகவும் சிறியது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை (Immunity) அதிகரிக்க உதவி செய்கிறது. 100 கிராம் குதிரைவாலியில் புரதம் 6.2 கிராம், கொழுப்பு 2.2 கிராம், தாதுஉப்பு 4.4 கிராம், நார்ச்சத்து 9.8 கிராம், மாவுச்சத்து 65.5 கிராம், கால்சியம் 11 மில்லிகிராம், பாஸ்பரஸ் 280 மில்லிகிராம் அளவிலும் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கேழ்வரகு:
கேழ்வரகு உண்பதால் உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம். இது சேதமடைந்த திசுக்களை சரிசெய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடல் உஷ்ணத்தை சமநிலைப்படுத்தவும், குடலுக்கு வலிமை சேர்க்கவும், உயர் ரத்த அழுத்தம் மற்றும் கல்லீரல் நோய்களை நீக்கவும் உதவி செய்கிறது. இதில் கால்சியம் சத்து அதிகளவு இருப்பதால் எலும்பு சம்பந்தமான நோய்களை விரட்டியடிக்கிறது.
கம்பு :
உலகின் மொத்த சிறுதானிய உற்பத்தியில் 55 சதவிகித இடத்தை கம்பு பிடித்திருக்கிறது. இதில் 11.8 சதவிகிதம் புரதம் இருக்கிறது. இது சருமத்திற்கு பொலிவு அளிக்கிறது. கண் பார்வைக்கு அவசியமான வைட்டமின் ஏ சத்து உருவாவதற்கு முக்கிய காரணியான பீட்டா கரோட்டீன் இதில் அதிகளவு இருக்கிறது.