உடல் சூட்டைத் தணிக்கும் பூசணிக்காய் கூட்டு- சுவையாக செய்வது எப்படி?
கோடைக்காலத்தில் வெப்பத்தினால் உடலில் அதிகம் உண்டாகும் வெப்பத்தை பூசணிக்காய் தணிக்கிறது. அதனால் இதைக் கோடைப் பூசணி என்றும் வழங்குவார்கள். உணவுகளுக்காகவும் மருத்துவக் குணங்களுக்காவுமே பூசணியைப் பயிர் செய்கின்றனர்.
நீரிழிவு நோயாளிகளும், உடல் பருத்த ஊளைச் சதை நோயாளிகளும் இதைச் சமைத்து உண்ணலாம். உடல் பருக்காது, உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியையும் தருகிறது.
தேவையான பொருட்கள்
வெள்ளைப் பூசணி - 1 பத்தை
தேங்காய் - 1/2 மூடி,
பச்சை மிளகாய் - 4,
சீரகம் - 1 டீஸ்பூன்,
இஞ்சி - 1 சிறிய துண்டு,
கொத்தமல்லி - 1 கைப்பிடி,
தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்,
கடுகு, உளுத்தம் பருப்பு - தலா 1 டீஸ்பூன்,
பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.
செய்முறை -
- தேங்காய், பச்சை மிளகாய், சீரகம், இஞ்சி, கொத்தமல்லி அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
- கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து பெருங்காயத் தூள் சேர்த்து தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
- பூசணிக்காயை நன்றாக வேக வைத்து, அதில் அரைத்த விழுது மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
- கடைசியில் தாளித்ததை மேலே தூவி இறக்க வேண்டும். சுவையான பூசணிக்காய் கூட்டு ரெடி.
-
தேவைப்பட்டால் விழுதுக்கு 1 டீஸ்பூன் பொட்டுக்கடலை சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.