நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் ஆவாரம்பூ ஹெர்பல் டீ; எப்படி செய்யனும் தெரியுமா?

Health Herbal tea
By Thahir Jul 13, 2021 01:42 PM GMT
Report

கிராமப்புறங்களில் கிடைக்கும் ஆவாரம் பூ எண்ணற்ற மருத்துவ நன்மைகளைக் கொண்டது. இது பல்வேறு நோய்களைக் குணப்படுத்துவதால் நோயினால் மனிதன் இறப்பதை தடுக்க உதவுகிறது எனக் கூறப்படுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் ஆவாரம்பூ ஹெர்பல் டீ; எப்படி செய்யனும் தெரியுமா? | Lifestyle Health

இன்று பெரும்பாலானோர் சர்க்கரை நோயினால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் குணம் ஆவாரம் பூவுக்கு உண்டு. மேலும் நம் உடல் தங்கம் போல் பளபளக்க உதவும் தங்கநிறப் பூவும் இதுதான்.

காயவைத்த ஆவாரம் பூக்கள் அல்லது காயவைத்த ஆவாரம் பூ பொடியை நீரில் கலந்து குடிப்பதால் நமக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. உடல் சூடு, பித்தம், அதிக உதிரப்போக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், குடற்புண் போன்றவற்றிற்கு இந்த ஆவாரம் பூ தேனீர் தீர்வளிக்கிறது.

மேலும், இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தும், உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வியர்வை மூலம் வெளியேற்றி, சருமத்திற்கு பளபளப்பைக் கொடுக்கும். பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலை அறவே நீக்கும். இதனைத் தொடர்ந்து அருந்தி வந்தால், உடலை நோயின்றி ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

இந்த ஆவாரம் பூவில் ஆரோக்கியமான ஹெர்பல் டீ எவ்வாறு செய்வது என்பதைப் பார்ப்போம்.

ஆவாரம் பூ கிடைக்கும் சமயங்களில் வாங்கி காய வைத்துக் கொண்டால் நாம் மாதக் கணக்கில் அதனை பயன்படுத்தலாம். அப்படி வாங்கும்போது சில சமயம் பூக்களின் உள்ளே புழு இருக்கும். அதனை கவனமாக பார்த்து, நீக்கிவிட்டு காய வைத்துக் கொள்வது நல்லது. காய வைத்த ஆவாரம் பூக்களை அரைத்து பொடியாக செய்தும் டீ போட பயன்படுத்தலாம்.

செய்முறை 

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் நன்றாக கொதிக்கும்போது சிறிதளவு, காயவைத்த ஆவாரம் பூக்களை அதில் போட வேண்டும். நன்றாக கொதித்த பின் வடிகட்டி குடிக்கலாம். உங்களுக்கு தேவைப்பட்டால் தேன் அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து பருகலாம். இனிப்பு சாப்பிட கூடாதாவர்கள், இனிப்பு சேர்க்காமல் வெறுமனே குடிக்கலாம். இதேபோல், ஆவாரம் பூ பொடியையும், கொதிக்கின்ற நீரில் போட்டு, வடிகட்டி குடிக்கலாம்.