சீமான், திருமாவளவன், என்னை போன்றவர்களுக்கு பாதுகாப்பு இல்லை - ஜான் பாண்டியன்
சீமான் திருமாவளவன் மற்றும் என்னை போன்ற தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என ஜான் பாண்டியன் பேசியுள்ளார்.
ஜான் பான்டியன்
தமிழக மக்கள் முன்னேற்ற கழக கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நெல்லையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் அக்கட்சியின் தலைவர் பி.ஜான் பான்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் அவர் பேசியதாவது, தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கட்சியின் வேட்பாளராக நான் நின்று எனக்காக வாக்களித்த 2 லட்சம் மக்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் படும் துயரம் சொல்லி மாளாது. ஆளும் கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள் கம்பெனியிடம் கையூட்டு பணம் வாங்கி கொண்டு அந்த மக்களை வெளியேற சொல்வதாக தகவல் வந்தது. அதனையடுத்து அந்த மக்களை சென்று சந்தித்தேன். அரசே ஏற்று நடத்த வேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் கோரிக்கை வைக்கிறது. அல்லது ஒரு குடும்பத்துக்கு 5 ஏக்கர் நிலம் வழங்கி அவர்களது வாழ்வாதார பிரச்சனைகளை சரி செய்ய வேண்டும்.
மாஞ்சோலை
5 தலைமுறைகளாக அங்கு மக்கள் வசித்து வருகின்றனர் என்பதை அரசு எண்ணிப்பார்க்க வேண்டும். வழக்காடு மன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. நல்ல தீர்ப்பை எதிர்பார்க்கிறோம். மாஞ்சோலை மக்களுக்கான எங்களது போராட்டம் தொடரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
சென்னையில் நடைபெற்ற தம்பி ஆம்ஸ்ட்ராங் படுகொலையை வன்மையாக கண்டிக்கிறேன். இந்த வழக்கை சிபிஐ விசாரித்தால் குற்றவாளிகளை விரைவாக கண்டுபிடிக்க முடியும் என நம்புகிறோம். தமிழகத்தில் படுகொலைகள் அதிகரித்துள்ளன. இந்த செயல்களுக்கு காவல் துறையில் உள்ள சில அதிகாரிகளும் உடந்தையாக இருப்பார்களோ என்ற சந்தேகம் உள்ளது. அரசு இந்த விஷயத்தில் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதிகாரிகளை மாற்றிய பிறகு கூட சமீபத்தில் கொலை நடந்துள்ளது.
பாதுகாப்பு
இந்தியா முழுவதும் சுற்றி திரிந்து மக்களை சந்திக்கும் என்னைப்போன்ற தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது உண்மை தான். கடந்த அதிமுக ஆட்சியில் எனக்கு வழங்கப்பட பாதுகாப்பை எடுத்து விட்டீர்கள். திருமாவளவன், கிருஷ்ணசாமி மற்றும் என்னை போன்ற தலைவர்களை கொலை செய்து விட்டால் பெயர் வாங்கி விடலாம் என்ற குறுகிய கண்ணோட்டத்துடன் சிலர் செயல்படுகின்றனர்.
அவர்களை கண்காணித்து தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என அரசிடம் கேட்டுக்கொள்கிறேன். சீமான், திருமாவளவன், கிருஷ்ணசாமி மற்றும் என்னை போன்ற தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. நாங்கள் பயத்தில் பாதுகாப்பு கேட்கவில்லை. எங்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை.
தமிழ்நாட்டில் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் என்கவுண்டர் செய்யப்படுவதை வன்மையாக கண்டிக்கிறோம். நீதி மன்றம் மூலம் தான் தண்டிக்க வேண்டும். மேலும் ஏழை எளிய மாணவர்கள் படித்து மருத்துவர் ஆக நீட் தான் காரணம். எனவே நீட் விலக்கு வேண்டாம்." என பேசியுள்ளார்