மாதவிடாய் வலிக்கு நிவாரணம் தரும் இஞ்சி துவையல்? செய்வது எப்படி?
“இஞ்சிக்கு மிஞ்சியது எதுவும் இல்லை” என்பது பழமொழி, அப்பேற்பட்ட இஞ்சி நம் சமையலில் முக்கிய பங்கு வகிக்கிறது. இஞ்சி உணவு செரிமானத்திற்கு உதவும் ஒரு முக்கிய உணவுப் பொருளாகும்.
இஞ்சியிடம் தஞ்சம் அடைந்தால் அஞ்ச வேண்டாம் என்கிற அளவிற்கு சித்த மருத்துவ உலகில் நோய்க்கு தீர்வளிக்கும் அனைத்து மருந்துகளிலும் இஞ்சி இடம் பெறுகிறது. இஞ்சியாக பயன்படுவதோடு மட்டுமல்லாமல் காய்ந்த பிறகு சுக்காகவும் பயன்படுகிறது.
மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு உண்டாகும் வலியை குறைக்க இஞ்சி உதவுகிறது. ஈரானில், 70 மாணவிகளிடத்தில் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு நிகழ்த்தப்பட்ட ஆய்வில், மாதவிலக்கின் முதல் 3 நாட்களில், ஒரு குழுவினருக்கு இஞ்சி வில்லைகளும், இன்னொரு குழுவினருக்கு ப்ளாசிபோவும் கொடுக்கப்பட்டது. 47.05% ப்ளாசிபோ எடுத்துக் கொண்டவர்களைக் காட்டிலும் 82.85% இஞ்சி வில்லைகளை எடுத்துக்கொண்டவர்களிடம் வலிக்கான அறிகுறிகள் குறைந்திருந்ததை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
இஞ்சி துவையல் எப்படி செய்வது என்று பார்ப்போம் -
தேவையான பொருட்கள்:
இஞ்சி - 1 துண்டு
தேங்காய் துருவல் - 0.5 கப்
காய்ந்த மிளகாய் - 3
உளுத்தம் பருப்பு, புளி, கடுகு, உப்பு, கறிவேப்பிலை, எண்ணெய், தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
- இஞ்சியை தோல் சீவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
- அதன் பிறகு இஞ்சியை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
- வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் மிளகாய், தேங்காய் துருவல், உளுத்தம் பருப்பு, இஞ்சியை போட்டு வறுத்தெடுக்க வேண்டும்.
- இதனுடன், புளி, உப்பு, தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- வாணலியில் சிறிதளவு எண்ணெய் சூடாக்கி, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலையை தாளித்து, அரைத்த கலவையை அதில் சேர்த்து வதக்க வேண்டும்.
- சுவையான 'இஞ்சி துவையல்' ரெடி...
-
இந்த இஞ்சி துவையலை வெறும் சோற்றுடன் பிசைந்து சாப்பிடால் மிகவும் சுவையாக இருக்கும்.