அதிகாலையில் சீக்கிரம் எழ முடியாமல் அவஸ்தைப்படுகிறீர்களா? இதை கடைப்பிடித்தால் போதும்!

life-style-health
By Nandhini Jul 16, 2021 10:00 AM GMT
Report

பெரும்பாலான மக்கள் காலையில் தாமதமாகவே எழுகிறார்கள். இதனால், பலரும் அலுவலகத்திற்கு அவசர அவசரமாக கிளம்ப வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

காலையில் தாமதமாக எழுவதால் காலை உணவை சிலர் தவிர்த்து விடுகின்றனர். அதுமட்டுமல்லாமல், நேரமாகி விட்டது என்று கண் மூடித்தனமாக பைக்கை ஓட்டிக் கொண்டு சென்று விபத்துக்களை சந்திக்கிறார்கள்.

இந்தப் பிரச்சினையை தவிர்க்க பலரும் காலையில் சீக்கிரமாக எழ முயற்சி செய்தும், அவர்களால் எழமுடியாமல் போய்விடுகிறது.

இதிலிருந்து விடுபட சில வழிமுறைகளை பின்பற்றினாலே போதும், நிச்சய்ம் அதிகாலை சீக்கிரம் எழுந்துவிடலாம்.

அலுவலக வேலை

காலையில் சீக்கிரம் எழ வேண்டும் என்றால், முதலில் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு மாலையில் சீக்கிரம் வந்துவிட வேண்டும். மாலையில் வீட்டிற்கு சென்ற பிறகு, குடும்பத்தினருடன் சந்தோஷமாக நேரத்தை செலவிட்டால், மனம் மட்டுமின்றி, உடலும் ரிலாக்ஸாகும்.

இரவு உணவு

இரவில் தாமதமாக, அதுவும் ஆரோக்கியமற்ற உணவுகள் உட்கொள்வதைத் தவிர்த்து விட வேண்டும். முடிந்தவரை அசைவ உணவுகள் உண்பதை தவிர்த்து விடுவது நல்லது. இப்படி இரவில் அசைவ உணவு சாப்பிட்டால், செரிமானம் சீராக நடைபெறாமல் தூக்கம் கெட்டுபோகும்.

உடற்பயிற்சி

அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்த பின், மனதை அமைதிப்படுத்த வெளியே காற்றோட்டமாக சிறிது தூரம் நடைப் பயிற்சியை மேற்கொள்ளலாம். இதனால் இரவில் நிச்சயம் நல்ல தூக்கம் பெற்று, அதிகாலையில் சீக்கிரமாக எழுந்துவிட முடியும்.

குளியல்

இரவு தூங்க செல்வதற்கு முன் குளித்தால், இரவில் நல்ல ஆழ்ந்த நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம். அதிலும் இரவில் சீக்கிரம் குளித்து விட்டு தூங்கினால், காலையில் அலாரம் அடிப்பதற்கு முன்பே எழ முடியும்.

தூக்கம்

இரவில் சீக்கிரம் தூங்க சென்றால், 7 மணி நேரத்திற்கு பின் தானாக விழித்து விடுவோம். ஏனெனில் சில நேரங்களில் உடலும் அதிகமான தூக்கத்தை விரும்பாது. ஆனால், பலர் இரவில் டிவி பார்க்கும் பழக்கத்தை மட்டும் நிறுத்த முடியவில்லை. இதன் காரணமாகவே அதிகாலையில் சீக்கிரம் எழ முடியாமல் போய்விடுகிறது.