ருசிக்க... ருசிக்க... மாம்பழத்தை அதிகமா சாப்பிட்டால் வரும் பின்விளைவுகளைப் பற்றி தெரியுமா?
கோடைகாலம் பல சோதனைகளை கொடுத்தாலும் அதிலிருக்கும் ஒரே ஆறுதல் மாம்பழம்தான். பல மாதங்கள் காத்திருந்து இந்த பருவகால பழத்தை சாப்பிடுவது உண்மையில் நமக்கு மகிழ்ச்சியை அளிக்கும். ஆனால் அதேசமயம் அதனால் நமது ஆரோக்கியம் கெட்டுவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மாம்பழத்தில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ, இரும்பு, தாமிரம் மற்றும் ஏராளமான பொட்டாசியம் ஆகியவை உடலுக்கு மிகச் சிறந்தவை. இது ஒரு எரிசக்தி உணவாகும், மேலும் உங்கள் உடலுக்கு தேவையான சர்க்கரையை வழங்கி நாள் முழுவதும் உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கும்.
சர்க்கரை அளவு
மாம்பழத்தில் கிளைசிமிக் குறியீடு அதிகளவில் உள்ளதால் உடனடியாக ரத்த சர்க்கரை மற்றும் ரத்த இன்சுலின் அளவை அதிகரித்துவிடும். அதனால், அளவாக சாப்பிட்டால் அமிர்தமாக இருக்கும்.
உடல் எடை அதிகரித்தல்
சரியான அளவு மாம்பழம் சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவும். பால் பொருட்களுடன் மாம்பழம் சேர்த்து சாப்பிடுவது மற்றும் அதிக அளவு மாம்பழங்களை சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்கும்.
குமட்டல்
அதிகமாக மாம்பழம் சாப்பிட்ட உடனேயே கசப்பான உணவுகளை சாப்பிடக்கூடாது. இது குமட்டல், வாந்தி மற்றும் சுவாசிப்பதில் சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
வயிற்றுப்போக்கு
அதிக அளவில் மாம்பழம் சாப்பிடுவது வயிற்றுப்போக்கை ஏற்படுத்திவிடும். எனவே, ஆசை மிகுதியால் அதிகம் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. மாம்பழத்தில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது. அளவுக்கு மிஞ்சும் போது செரிமானத்துக்கு நன்மை செய்யும் நார்ச்சத்தே வயிற்றுப்போக்கை ஏற்படுத்திவிடுகிறது.
தண்ணீர்
அதிகமான மாம்பழத்தை சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிக்கக்கூடாது. ஏனென்றால் இது உங்களுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் வயிற்று வலி, அமிலத்தன்மை ஆகியவை ஏற்படலாம். எனவே மாம்பழம் சாப்பிட்ட பிறகு அரை மணி நேரம் கழித்து தண்ணீர் அருந்தலாம்.
சருமத்தில் கொப்புளம்
மாம்பழம் அதிகமாக சாப்பிட்டால், உடலின் வெப்பநிலையை சற்று அதிகரிக்கச் செய்யும். இது சருமத்தில் கொப்புளம், அதைத் தொடர்ந்து காய்ச்சல் போன்றவற்றை ஏற்படுத்திவிடலாம் என ஆய்வுகள் கூறுகின்றன.