நிம்மதியான ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? அப்போ இதையெல்லாம் ட்ரை பண்ணுங்க!
ஒருவருக்கு தூக்கம் மிகவும் இன்றியமையாதது. தூக்கத்தின் மூலம் தான் நாள் முழுவதும் ஓய்வின்றி வேலை செய்யும் உடலுக்கு போதிய ஓய்வு கிடைக்கிறது. தூக்கம் சரியான அளவில் கிடைத்தால், உடல் நீண்ட நாள் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் தற்போதைய மன அழுத்தமிக்க வாழ்க்கை முறை, தொழில்நுட்பம், வேலைப்பளு போன்றவைகளால் ஏராளமானோர் தூக்கத்தைத் தொலைத்துள்ளனர்.
போதிய அளவு தூக்கம் கிடைக்காததால், எந்த ஒரு வேலையையும் செய்ய முடியாமல், எதிலும் கவனத்தை செலுத்த முடியாமல் அவஸ்தைப்பட நேரிடும்.
நாள் முழுவதும் நடந்த பிரச்சனை, போன வாரம் நடந்த பிரச்சனை, போன மாதம் நடந்த பிரச்சனை என்று, இரவு தூங்கச் செல்லும் போது எதை எதையோ எண்ணிக் கொள்வார்கள். அதை நினைத்து மனம் நொந்து, மன வேதனைப்பட்டு கஷ்டப்பட்டுக் கொண்டே இருப்பார்கள்.
இதனால் இரவு தூக்கம் கெட்டுப் போகும். மறுநாள் காலை அவர்களால் சீக்கிரமாக கண் விழிக்க முடியாது. உடல் சோர்வு ஏற்படும். ஆகையால் மறுநாள் வேலையும் கெட்டுப்போகும். இப்படியாக அவர்களுடைய வாழ்க்கையில் நடந்த கஷ்டங்களை நினைத்து நினைத்து, அடுத்த நாள் வாழக்கூடிய வாழ்க்கையையும், அடுத்த நாள் அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய நல்லதையும் அவர்களே கெடுத்துக் கொள்வார்கள்.
தூங்காமல் இருந்தால், நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனமடையச் செய்வதோடு, சர்க்கரை நோய் மற்றும் இதய நோயின் அபாயத்தை அதிகரிக்கும். எனவே தூக்கமின்மையின் தீவிர தாக்குதலிருந்து விடுபட, தூக்க மாத்திரைகளை அதிகம் எடுக்காமல், ஒருசில எளிய இயற்கை வழிகளின் மூலம் தூக்கத்தைப் பெற முயலுங்கள்.
நறுமண எண்ணெய்
படுக்கும் முன் மணிக்கட்டுப் பகுதியில் சிறிது மல்லிகைப் பூ எண்ணெயை தடவிக் கொள்ளுங்கள். இது ஒருவித மயக்க உணர்வை ஏற்படுத்தி, நல்ல ஆழ்ந்த தூக்கத்தைப் பெற வழிவகுக்கும்.
உடற்பயிற்சி
ஒருவர் தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்து வந்தால், இரவில் நல்ல தூக்கம் கிடைக்கும். அதற்காக தூங்கும் முன் உடற்பயிற்சிகளை செய்யக்கூடாது. காலை அல்லது மாலை வேளையில் உடற்பயிற்சியில் ஈடுபடலாம். அதிலும் ஏரோபிக் உடற்பயிற்சியை தினமும் மேற்கொண்டால், நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.
காபி மற்றும் டீ
காபி மற்றும் டீ ஆகிய இரண்டையும் இரவில் குடிப்பதை தவிர்ப்பது நல்லது. இவை இரண்டும் தூக்கத்தை தடுக்கக்கூடியவை. காபி மற்றும் டீ குடிப்பதாக இருந்தால் மாலை நான்கு மணியோடு நிறுத்திக்கொள்ளுங்கள்.
மது பழக்கம்
மது அருந்துவது உங்கள் தூக்கத்தை கெடுப்பதோடு உங்களின் உடல் நலத்தையும் பாதிக்கும். மது குடித்தால்தான் தூக்கம் வரும் என்பது ஒரு சிலரின் எண்ணம். ஆனால் அது மிகவும் தவறு, இயற்கையாக வரும் தூக்கத்தை செயற்கையாக வரவைத்தால் அதன் பாதிப்புகள் மிகவும் அதிகமாகும். இரவில் மதுப்பழக்கத்தை தவிர்த்தல் நல்லது.
படுக்கை அறை
நீங்கள் உபயோகப்படுத்தும் தலையணை இலகுவாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். அறையில் அதிக வெளிச்சம் மற்றும் சத்தம் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
யோகா
மூச்சு பயிற்சிகளை முறையாக செய்து வந்தால் இவை உங்கள் உடல் மற்றும் நரம்பு மண்டலத்தை சாந்தப்படுத்தி நல்ல தூக்கத்தை கொடுக்கும்.