கோடை வெயிலிலிருந்து சருமத்தை பாதுகாக்கணுமா? இதோ வழிமுறைகள்!
கோடை காலம் என்றதும் நம் எல்லாருக்கும் பயம் தருவது வேர்வை, வெயில், வறண்ட சருமம், முகப்பரு, அணல் காற்று, கரும்புள்ளிகள். குறிப்பாக கல்லூரி, அலுவலகம் செல்லும் பெண்கள் வெளியில் செல்லவே பயப்படுவார்கள்.
கவலை வேண்டாம். கோடை கால சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து நமது சருமத்தை பாதுகாத்துக்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும். இதற்காக பியூட்டி பார்லருக்கு சென்று விலை அதிகமான அழகு சாதனப்பொருட்களை உபயோகிக்கவேண்டுமென அர்த்தம் இல்லை.
நமது வீட்டில் இருக்கும் எளிய பொருட்களை வைத்தே வெயில் தாக்கத்தால் சருமத்தில் ஏற்பட்ட டானிங், சோர்வு, சரும வறட்சி ஆகியவற்றை தடுத்து, உங்களின் பொலிவை மீட்டெடுக்கலாம்.
குளியல்
வெயிலில் முதலில் பாதிக்கப்படுவதும் நம்முடைய தோல்களே. இதை பராமரிப்பது மிக முக்கியம். இதற்கு முக்கியமாக தினமும் 2 முறை குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.
பருத்தி ஆடை
பருத்தி ஆடைகளை உடுத்த வேண்டும். கருப்பு நிற ஆடைகளை தவிர்க்க வேண்டும். வாசனை திரவியங்கள், பவுடர்களை தவிர்க்க வேண்டும். காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை வெயிலில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும்.
பருக்கள் மறைய
வெயிலின் தாக்கம் முகத்தில் ஏராளமான கரும்புள்ளிகளை கொண்டு வரும். எண்ணைப் பசையான உடம்பு என்றால் முகத்தில் பருக்கள் பாடாய்ப்படுத்தி எடுத்துவிடும். கரும் புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய பப்பாளிப் பழச்சாறை முகத்தில் தடவலாம். எக்காரணத்தை கொண்டும் பருக்களை கிள்ளிவிடாதீர்கள். இதனால் பருக்கள் அதிகமாகும்.
கண் உஷ்ணம் குறைய
கோடை வெயிலில் அலைந்துவிட்டு வந்தபின் கண்கள் உஷ்ணத்தால் எரியும். வெள்ளரிக்காயை மெல்லிய துண்டுகளாக வெட்டி இமைகளின் மீது வைத்து ஒற்றி எடு ங்கள், கண் எரிச்சல் பறந்துவிடும். இளநீரை முகத்தின் மீது ஸ்ப்ரே செய்யுங்கள் அல்லது தடவிக்கொண்டால் முகசருமம் வெப்பத்தால் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கலாம்.
முகம் கழுவுதல்
கோடை காலத்தில் முகத்தை அடிக்கடி கழுவ வேண்டும். அதனால், முகத்தில் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் சேராமல் தவிர்க்கலாம். முகத்தை ஒழுங்கான முறையில் கழுவுவதால் முகத்துளைகளில் அழுக்குகள் படியாமல் சருமத்தை மிருதுவாக வைத்துக்கொள்ள முடியும்.