“தோற்றால் என் உயிரை விட்டு விடுவேன் - முடிவு உங்கள் கையில்?” – வைரலாகும் விஜயபாஸ்கர் போஸ்டர்!
விராலிமலையில் நடந்த தேர்தலில் இருமுறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெற்றி பெற்றார். ஆனால், தற்போது விஜயபாஸ்கருக்கு போட்டியாக திமுக வேட்பாளர் தென்னலூர் பழனியப்பன் களம் இறங்கியுள்ளார். இது ஒருபுறமிருக்க தொகுதியிலுள்ள 30 ஆயிரம் முத்தரையர் வாக்குகளைக் கவர அதிமுக சேர்ந்தவரே சுயேச்சையாக நிற்க, அமமுக அதிமுகவின் ஓட்டை பிரிக்க, ஐடி ரெய்டு காலை சுற்ற விஜயபாஸ்கர் சின்னாபின்னமாகியுள்ளார்.
எங்கே தனது வெற்றி பறி போய்விடும் என்ற பயம் ஒவ்வொரு பிரச்சாரத்திலும் வெளிப்பட்டு வருகிறது. பிரச்சாரத்தில் பழனியப்பன் கண் கலங்கி, தன்னை வெற்றிபெற வைக்குமாறு மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
மேலும் தோற்றால் உயிரை விட்டுவிடுவேன் என்றும் மக்களிடம் கூறியுள்ளார். இந்த விஷயம் எட்டுத்திக்கும் பரவி ஓட்டாக மாற, விஜயபாஸ்கரும் ஒரு ஸ்டன்ட் போட்டார். அவரும் எனக்கு பிபி, சுகர் இருக்கிறது… இருந்தாலும் உங்களுக்காக உழைக்கிறேன் என அனுதாபத்தைத் தேடினார். தாய்மார்களின் வாக்குகளைக் கவர தனது இரு மகள்களையும் களத்தில் இறக்கி இருக்கிறார்.
இந்நிலையில், விஜயபாஸ்கரின் ஆதரவாளர் ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள ஒரு போஸ்டரும் தற்போது வைரலாகி வருகிறது. “வெறும் 10 நாட்கள் தேர்தலுக்காக ஊருக்குள் வந்து ஓட்டுக் கேட்பவர்களே தோல்வியடைந்தால் உயிரை விட்டுவிடுவேன் என்றும், 10 ஆண்டுகள் வாக்களித்த மக்களுக்காக இரவு பகல் பாராமல் ஒவ்வொரு கஷ்டகாலங்களிலும் உடன் நின்ற என்னுடைய முடிவு எப்படி இருக்கும்? – முடிவு உங்கள் கையில்?” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் விஜயபாஸ்கர் சோகமாக இருக்கும்படியான புகைப்படமும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.