அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து - 35 பேர் உயிரிழப்பு..!

Death Accident Boat Peoples Libiya 35
By Thahir Apr 17, 2022 07:46 PM GMT
Report

உள்நாட்டு போர் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இவர்கள் மத்திய தரைக்கடல் வழியாக சட்டவிரோதமாக படகுகளில் பயணம் செய்து ஐரோப்பாவை அடைய முற்படுகின்றனர்.

இப்படி மிகச் சிறிய படகில் அளவுக்கு அதிகமான மக்களுடன் ரகசியமாக மேற்கொள்ளப்படும் நீண்ட கடல் பயணங்கள் பல நேரங்களில் துயரத்தில் முடிந்துவிடுகின்றன.

இந்த நிலையில் லிபியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள சப்ரதா நகருக்கு அருகே கடலில் சென்று கொண்டிருந்த மரப்படகு ஒன்று எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது.

இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கினர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் லிபிய கடலோர காவல்படையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் அதற்குள் பெண்கள், சிறுவர்கள் உள்பட 35 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அதே வேளையில் நீரில் தத்தளித்தபடி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 6 பேரை மீட்பு குழுவினர் மீட்டனர்.

இந்த விபத்தில் மேலும் பலர் மாயமாகி உள்ளனர். அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை. முன்னதாக கடந்த 12-ந்தேதி லிபியாவின் சோர்மன் நகரில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.