வெறுப்பு அரசியலுக்கு முடிவு கட்டுங்க : பிரதமருக்கு ஓய்வு பெற்ற நீதிபதிகள் கடிதம்

By Irumporai May 01, 2022 06:23 AM GMT
Report

 வெறுப்பு அரசியலுக்கு முடிவு கட்டுமாறு முன்னாள் நீதிபதிகளும், உயரதிகாரிகளும் பிரதமர் மோடியை வலியுறுத்தியுள்ளனர்.

டெல்லி முன்னாள் துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங், முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் திருமதி சுஜாதா சிங், மற்றும் முன்னாள் நீதிபதிகள் உள்ளிட்ட 108 பேர் இது தொடர்பாக பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில்.

அண்மை காலமாக நாட்டில் வெறுப்புகள் மட்டுமே நிறைந்த ஒரு வெறித்தனத்தை காண்பதாக குறிப்பிட்டுள்ளனர். இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகங்கள் மட்டுமல்ல நாட்டில் அரசியல் அமைப்பு சட்டமே பலிபீடத்தில் வைக்கப்பட்டது போல் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், சமூக அச்சுறுத்தலுக்கு எதிரான உங்கள் மவுனம் காது கேளாதது போல உள்ளது. என்று தெரிவித்துள்ளனர். பாஜக ஆளும் மாநிலங்களில் இந்த வெறுப்பு அரசியல் புதிய பரிமாணத்தை பெற்றிருப்பதாக கூறியுள்ள முன்னாள் நீதிபதிகளும் அதிகாரிகளும், அரசியல் அமைப்பின் தனித்துவம் சிதைக்கப்படாமல் காக்கும் பொறுப்பு பிரதமருக்கு இருப்பதாக கூறியுள்ளனர்.

கடிதத்தில் கையெழுத்திட்டிருப்போர் தங்களை அக்கறை உள்ள குடிமக்கள் என்று குறிப்பிட்டு இருப்பதோடு அதன் பின்னணியில் எந்த வித உள்நோக்கமும் இல்லை என கூறியுள்ளனர்.

முன்னாள் அரசு ஊழியர்களான தாங்கள் வழக்கம் போல இத்தகைய கடின வார்த்தைகளை பயன்படுத்துவது இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ள அவர்கள் அரசியல் சாசனத்தின் தனித்துவம் சிதைக்கப்படும் போது கோபம் மற்றும் வேதனையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்னனர்.