கர்ணன் விவகாரத்தை இதோடு விட்டுவிடுவோம் - உதயநிதி ஸ்டாலின்

Ranjith karnan Udhayanidhi Stalin Karunanidhi Mari Selvaraj
By mohanelango Apr 15, 2021 06:40 AM GMT
Report

மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான கர்ணன் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஆனால் கொடியன்குளம் வன்முறையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில், எந்த ஆண்டு இந்த வன்முறை அரங்கேறியது என்பது குறித்து தொடர்ந்து சர்ச்சை ரசிகர்கள் மத்தியிலும் அரசியல் வட்டாரத்திலும் நிலவி வருகிறது.

1995-ல் கொடியன்குளம் கலவரம் நடந்த நிலையில் 1997-ல் நடைபெற்றதாக படத்தில் காட்டப்பட்டுள்ளது. கலைஞரின் ஆட்சியில் நடைபெற்றதாக கூறப்படுவது வரலாற்றை திரித்து கூறும் நிகழ்வாகும் என்று பலரும் தங்களின் கருத்துகளை தெரிவித்த நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இதனை சுட்டிக் காட்டியுள்ளார்.

இது தொடர்பாக தயாரிப்பாளரிடம் பேசிய போது அவர் மாற்றுவதாக கூறியுள்ளார் என்று உதயநிதி தெரிவித்திருந்தார்.

ஆனால் படக்குழுவினர் வருடத்தை மாற்றி 90களில் பிற்பகுதியில் எனக் குறிப்பிட்டிருந்தனர். இதனால் திமுகவினர் மீண்டும் அதிருப்தி அடைந்தனர். தற்போது இதற்கு உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

கர்ணன் தவிர்க்க முடியாத திரைப்படம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. 1995-ல் நடந்த கொடியன்குளம் கலவரம் 1997-ல் நடந்ததாக...

Posted by Udhayanidhi Stalin on Wednesday, April 14, 2021

தன்னுடைய முகநூல் பதிவில், “கர்ணன் தவிர்க்க முடியாத திரைப்படம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. 1995-ல் நடந்த கொடியன்குளம் கலவரம் 1997-ல் நடந்ததாக காட்டப்பட்டிருந்ததை தயாரிப்பாளர் - இயக்குனரிடம் சுட்டிக்காட்டினேன். அவர்களும் அதனை திருத்திக்கொள்வதாக உறுதியளித்து அதை இன்று செய்துள்ளனர்.

படைப்பிலுள்ள பிழையை சுட்டிக்காட்டுகையில் அதை திருத்திக்கொள்வது வரவேற்புக்குரியது. கொடியன்குளம் கலவரம் 1995-ல் அதிமுக ஆட்சியில் நடந்ததை அனைவரும் அறிவர். அதற்கு ஏராளமான சான்றுகளும் உள்ளன. எனினும்'90-களின் இறுதியில்' என திருத்தப்பட்டு வருவதை முன்வைத்தும் அதிருப்தி குரல்கள் எழுகின்றன.

ஒடுக்கப்பட்ட மக்களின் மேன்மைக்கான கலைஞரின் பங்களிப்புகள் காலத்தால் அழியாதவை.அதை யாராலும் மறுக்கவோ-மறைக்கவோ முடியாது. எனவே, இந்த விஷயத்தை இத்துடன் விடுத்து ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்துவோம். கர்ணன் படக்குழுவுக்கு மீண்டும் என் அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.' என்று கூறியுள்ளார்.