ஆட்டை கொன்று மரத்தில் தொங்க விட்ட சிறுத்தை - பொதுமக்கள் அச்சம்
தென்காசி அருகே ஆட்டை அடித்து கொன்று மரத்தில் தொங்க விட்டு சென்ற சிறுத்தையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சியில் மலையில் சிறுத்தை, யானை, காட்டெருமை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இவை அடிக்கடி மலையடிவாரத்திலுள்ள கிராமத்திற்குள் புகுந்து கால்நடை மற்றும் பயிர்களை சேதப்படுத்துவது வழக்கம்.
இதனிடையே கடையம் அருகேயுள்ள கடனாநதி அடிவாரப் பகுதியில் உள்ள பெத்தான் பிள்ளை குடியிருப்பை சேர்ந்த பட்டு என்பவர் ஆடு மேய்ப்பதோடு மட்டுமல்லாமல் விவசாயமும் செய்து வருகிறார். இவர் நேற்று வழக்கம் போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று வீடு திரும்பிய நிலையில் ஆடுகளை எண்ணியுள்ளார்.
அதில் ஒரு பெண் ஆடு காணாமல் போனது தெரியவந்தது.இதனையடுத்து நேற்று மாலை முழுவதும் தேடிப் பார்த்தும் கிடைக்காத நிலையில் இன்று காலை மலை அடிவாரப் பகுதிகளில் அவர் தேடிப்பார்த்துள்ளார். அப்போது ஒரு மரத்தில் ஆடு தொங்கி கொண்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். அருகில் சென்று பார்த்தபோது அது காணாமல் போன தனது பெண் ஆடு என்பது தெரிய வந்தது.
உடனடியாக இதுகுறித்து பட்டு கடையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்து வனத்துறை அதிகாரிகள் விசாரணையில் நடத்தியதில் ஆட்டை சிறுத்தை அடித்துக் கொன்றது தெரிய வந்தது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.