தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல்: முழு விபரங்கள்
தமிழகம், புதுச்சேரி, கேரளம், அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் அட்டவணையை தலைமைத் தேர்தல் ஆணையர் சுநீல் அரோரா இன்று வெளியிட்டுள்ளார். புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர் சுநீல் அரோரா ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை அறிவித்தார்.
அதன்படி, தமிழகம், புதுச்சேரி, கேரளத்துக்கு ஏப்ரல் 6-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ஒரே கட்டமாக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்று தலைமைத்தேர்தல் ஆணையர் சுநீல் அரோரா அறிவித்துள்ளார். தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கும் கேரளத்தில் 140 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த மூன்று மாநிலங்களிலும் வேட்பு மனு தாக்கல் மார்ச் 12ஆம் தேதி தொடங்கும். வேட்பு மனு தாக்கல் செய்ய மார்ச் 19 கடைசி நாள். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 20-ஆம் தேதி நடைபெறும். வேட்பு மனுவை திரும்பப் பெற மார்ச் 22 கடைசி நாள்.
ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மூன்று மாநிலங்களிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும்.
மே 2-ஆம் தேதி மூன்று மாநிலங்களிலும் பதிவாகும் வாக்குகள் எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.