சசிகலா சட்டப் போராட்டத்தை தொடர்வார் - தினகரன் அதிரடி
சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டு சிறைத்தண்டனை பெற்று வந்த சசிகலா கடந்த 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். இதற்கு இடையில் கடந்த ஜனவரி 20-ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதனால் அவர் தமிழகம் வருவது தாமதமானது. பின்பு அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் 11 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதன் பின் நீண்ட நாட்கள் தனிப்படுத்தப்பட்டிருந்தார். பின்பு நேற்று பெங்களூருவில் இருந்து கிளம்பிய சசிகலா இன்று சென்னை வந்தடைந்தார். அவருக்கு வழி நெடுக அமமுக தொண்டர்கள் ஆதரவு அளித்தனர். இந்நிலையில் இன்று அமமுக பொதுச்செயலாளர் தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்பொழுது அவர் கூறுகையில், “உறுப்பினர் அட்டை வழங்கும் அதிகாரமே பொதுச்செயலாளரிடம் தான் உள்ளது. புரட்சித்தலைவர் கண்ட அதிமுகவில் ஜெயலலிதா இருந்த வரையும் அதில் உள்ள சட்ட விதிகளில் பொதுச்செயலாளர் தான் எல்லா அதிகாரம் உடையவர். அவர் தான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும்.
பொதுச்செயலாளர் தான் ஒருவருக்கு பதவி நியமனம் செய்ய முடியும், பதவியில் இருந்து நீக்கமுடியும். மேலும் பொதுச் செயலாளருக்கான சட்டப்போராட்டத்தை சசிகலா தொடர்வார்” என்று தெரிவித்துள்ளார்.