சுவர் இடிந்து விழுந்து மாணவர்கள் பலி - மறு உத்தரவு வரும் வரை பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு
நெல்லையில் சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சாஃப்டர் மேல்நிலைப்பள்ளிக்கு மறு உத்தரவு வரும்வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை டவுன் எஸ்.என்.ஹைரோடு பொருட்காட்சி மைதானம் எதிரே சாஃப்டர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்தப் பள்ளியில் கிட்டதட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
கொரோனா காரணமாக தற்போது இந்த பள்ளியில் மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் இயங்கி வரும் நிலையில் இன்று காலை கழிவறைப் பகுதியில் இருந்த சுவர் இடிந்து விழுந்தது.
இதில் 2 மாணவர்கள் சம்பவ இடத்திலேயும், ஒருவர் மருத்துவமனையிலேயும் உயிரிழந்தார். மேலும் 4 மாணவர்கள் காயமடைந்த நிலையில் அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து நடந்தவுடன் உடனடியாக நெல்லை மாவட்ட கலெக்டர், உயர் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். விபத்து குறித்து விசாரிக்க விசாரணைக் குழு அமைக்கப்படும் எனவும் இனி வரும் காலங்களில் விபத்துகள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
மேலும் விபத்து சம்பவம் தொடர்பாக சாப்டர் பள்ளி தாளாளர் சாலமன் செல்வராஜ், தலைமை ஆசிரியை ஞானசெல்வி மற்றும் கட்டிட ஒப்பந்ததாரர் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பள்ளியில் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதால் நாளை (18.12.2021) முதல் மறு உத்தரவு வரும்வரை விடுமுறை அறிவிக்கப்படுவதாக முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.