அரசியல்வாதி அவதாரம் எடுத்த பிரபல டென்னிஸ் வீரர் - ஆச்சரியத்தில் ரசிகர்கள்
பிரபல டென்னிஸ் நட்சத்திரம் லியாண்டர் பயஸ் மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று முதல்வராகியிருக்கும் மமதா பானர்ஜி தனது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை பிற மாநிலங்களிலும் விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளார். அதில் முதற்கட்டமாக கோவா மாநிலத்தின் மீது மையம் கொண்டுள்ள மமதா அங்கு ஆளும் பாஜகவுக்கு எதிராக தன்னை ஒரு வலுவான தலைவராக அல்லது மாற்று சக்தியாக காட்டிக் கொள்ளும் வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
கோவாவில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மமதாவுக்கு மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் வியூகங்களை வகுத்துத் தந்து திரிணாமுல் காங்கிரஸை வெற்றி பெற வைத்த பிரசாந்த் கிஷோரை மீண்டும் கோவாவில் அவர் களமிறக்கியுள்ளார்.
இதனிடையே மமதா மூன்று நாட்கள் கோவாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவரை நேரில் சந்தித்து நடிகை நஃபிசா அலி, சமூக செயற்பாட்டாளர் மிருநாளினி தேஷ்பிரபு ஆகியோருடன் டென்னிஸ் நட்சத்திர லியாண்டர் பயஸும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
இதற்கிடையில் லியாண்டர் பயஸை கட்சியில் இணைந்ததற்காக வரவேற்ற மம்தா பானர்ஜி அவரை தனது இளைய சகோதரர் போன்றவர் என குறிப்பிட்டார். அவர் என் கட்சிக்கு வந்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சி எனவும் அவர் கூறியுள்ளார்.