"என் வாழ்நாள் முழுவதும் கொடுமை அனுபவித்தேன்" - பிரபல முன்னாள் இந்திய வீரர் வேதனை
தன்னுடைய கிரிக்கெட் வாழ்கை முழுவதும் நிற பாகுபாட்டால் கொடுமையை அனுபவத்து வந்ததாக முன்னாள் வீரர் மனவேதனை தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் உலகில் அவ்வபோது கேலி, கிண்டல் சர்ச்சைகள் வருவது வழக்கம் தான். ஆனால் நிற பாகுபாடு, மத பாகுபாடுகள் குறித்த சர்ச்சைகள் தற்போது அதிகரித்து வருகிறது.
குறிப்பாக முன்னாள் கிரிக்கெட் வீரர் அசீம் ரஃபிக் ரேசிஸம் குறித்து குற்றச்சாட்டை முன்வைத்ததில் இருந்து தொடர்ந்து தற்போது பல்வேறு வீரர்களும் தங்களது அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் முன்னாள் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளரான லக்ஷ்மண் சிவராம கிருஷ்ணனும் நிற பாகுபாட்டால் மனவேதனை அடைந்துள்ளார். தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக செயல்பட்டு வரும் அவர் போட்டியின் போது வர்ணனையாளர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்கள் கிண்டலடித்து வருவார்கள். அதுபோன்ற ஒரு ட்வீட்டிற்கு தான் அவர் பதிலளித்துள்ளார்.
அதில் இதுநாள் வரை என்னுடைய வாழ்கையில் தொடர்ந்து நிற பாகுபாட்டால் விமர்சிக்கப்பட்டும் ஒதுக்கப்பட்டும் வருகிறேன். இதில் மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால் எனது சொந்தநாட்டு மக்களே என்னை நிறத்தை வைத்து விமர்சித்தனர். எனவே இவற்றையெல்லாம் விட, நீங்கள் எனது கமெண்ட்டேட்டரியை கிண்டல் செய்வது பாதிப்பை ஏற்படுத்தாது என மன வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்னை குறித்து ஏற்கனவே அபிநவ் முகுந்தும் பேசியுள்ளார். அவர், நான் 15 வயதில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு பயணித்துள்ளேன். சிறுவயது முதலே மக்கள் எனது நிறத்தை வைத்து ஏன் மதிப்பிடுகிறார்கள் என்பது புரியாத ஒன்றாக உள்ளது. நான் சென்னையில் பிறந்து வளர்ந்தவன். அங்கு வெயில் எப்படி இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படிபட்ட வானிலையில் தினமும், வெயிலில் தான் பயிற்சி மேற்கொள்வேன். இதனால் எனது நிறம் சற்று குறைந்தது.
நான் தினமும் வெயிலில் கிரிக்கெட் பயிற்சிகள் மேற்கொண்டு எனது நிறத்தினை இழந்ததன் மூலம் நான் கிரிக்கெட்டை எவ்வளவு காதலிக்கிறேன் என்பதை தெரிந்துக்கொள்ளலாம். ஆனால் அனைவரும் அதனை கிண்டலடிப்பார்கள் எனக்கூறியுள்ளார். இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.