வேளாண் சட்டங்களை இரண்டு ஆண்டுகள் நிறுத்தி வைக்க தயார் - மத்திய அரசு அறிவிப்பு
மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் இரண்டு மாதங்களை நெருங்கியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மத்திய அரசுக்கும் விவசாய சங்கங்களுக்கும் இடையே நடைபெற்ற ஒன்பது கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்துள்ளன. வேளாண் சட்டங்களை முழுவதுமாக திரும்பப்பெற வேண்டும் என விவசாயிகள் கோரிவரும் நிலையில் மத்திய அரசு அதற்கு சம்மதிக்கவே இல்லை.
இந்நிலையில் இன்று பத்தாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் மத்திய அரசு ஒரு புதிய சமரச திட்டத்தை முன்மொழிந்துள்ளது. அதில் வேளாண் சட்டங்களை நிறைவேற்றுவதை இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கத் தயார் எனத் தெரிவித்துள்ளது. இந்த பரிந்துரையை பரிசீலிப்பதாக விவசாயிகளின் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
வருகிற 22-ம் தேதி அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.