ஓடும் ரயிலில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை - வீடியோவால் சிக்கிய போலீஸ்
ஓடும் ரயிலில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் தொல்லை
கோவை ஆர்எஸ்புரம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தவர் ஷேக் அப்துல்லா. இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு சென்னை சென்றுள்ளார்.

பணியை முடித்துக் கொண்டு இன்டர்சிட்டி ரயில் மூலம் சென்னையில் இருந்து கோவை திரும்பியுள்ளார். அதே ரயிலில் கோவையை பூர்விகமாக கொண்டவரும், சென்னையில் சட்ட கல்லூரியில் படித்து வரும் ஒரு மாணவியும் பயணித்துள்ளார்.
காவலர் சஸ்பெண்ட்
அப்போது ரயில் காட்பாடி ரயில் நிலையம் அருகே செல்கையில் ஷேக் அப்துல்லா மாணவியின் அருகே அமர்ந்துள்ளார். தொடர்ந்து அவர் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதனை அந்த மாணவி செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். மேலும் இதுதொடர்பாக ரயில்வே காவல்துறையிடம் புகாரும் அளித்துள்ளார்.
இதன் அடிப்படையில், ரயில்வே காவல்துறையினர் ஷேக் மீது வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனையடுத்து சேக் அப்துல்லாவை காவல்துறையில் இருந்து பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.