தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது - ஓபிஎஸ் கண்டனம்

Tamil nadu AIADMK O. Panneerselvam
By Thahir Oct 25, 2022 10:00 AM GMT
Report

வெடிகுண்டு தயாரிக்கும் அளவுக்கு தமிழ்நாட்டின் சட்டம் சீர்குலைந்துள்ள திமுக அரசிற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஓபிஎஸ் கண்டனம்

கடந்த ஒன்றரை ஆண்டு கால திமுக ஆட்சியில் தீவிரவாதம், பயங்கரவாதம், கொலை, கொள்ளை, வன்முறை ஆகியவை தலைவிரித்து ஆடுகிறது என்றும், சட்டம் - ஒழுங்கு சீர்செய்யப்பட்டால்தான் தமிழ்நாடு தொழில் வளத்திலும், பொருளாதார வளர்ச்சியிலும் முன்னேறும் என்றும் சுட்டிக்காட்டி சட்டம் ஒழுங்கை சீர் செய்ய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று எனது அறிக்கைகள் வாயிலாக அவ்வவ்போது வேண்டுகோள் விடுத்து வந்துள்ளேன்.ஆனால் சட்டம் ஒழுங்கு சீர் செய்யப்பட்டதாக தெரியவில்லை.

Law and order has broken down in Tamil Nadu - OPS

உதாரணமாக காவல்துறையினரால் தமிழ்நாடு முழுவதும் 2,500 ரவுடிகள் பிடிக்கப்பட்டதாக பத்திரிக்கைளில் சில மாதங்களுக்கு முன் செய்தி வந்தது. நான் கூட அரசு ஏதோ நடவடிக்கை எடுக்கிறது என்று தான் முதலில் நினைத்தேன். ஆனால் இதற்கு பின் சட்டம் ஒழுங்கு இன்னும் மோசமாகத்தான் சென்று கொண்டிருக்கிறது.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றத்திலிருந்து, தமிழ்நாட்டில் அன்றாடம் ஒரிரண்டு கொலைகள் என்ற நிலை படிப்படியாக மாறி, தினமும் சராசரியாக எட்டு முதல் பத்து கொலைகள் நடைபெறுவது வாடிக்கையாகிவிட்டது. அண்மைக்காலமாக பெட்ரோல் குண்டு கலாச்சாரம் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறது.

பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவங்கள் எல்லாம் நடைபெற்று வருகின்றன.இதைத் தவிர ஏராளமான தற்கொலைகள் வேறு. அண்மையில் கூட “ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டை” என்ற பெயரில் 1,310 ரவுடிகள் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வந்தன.ஆனால் களயதார்த்தம் என்பது வேறு மாதிரியாக இருக்கிறது.வன்முறைக் கலாச்சாரம் தலைவிரித்து ஆடுகிறது.

இதற்கு எடுத்துக்காட்டு தான் நேற்று முன் தினம் கோயம்புத்துார் மாவட்டத்தில் நடைபெற்ற எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவம். கோயம்புத்துார் மாவட்டம், கோட்டைமேட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகில் நேற்று முன்தினம் பலத்த வெடி சத்தத்துடன் கார் ஒன்று வெடித்து சிதறியதாகவும், இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், இதற்கு காரணம் எரிவாயு உருளை வெடிப்பு என்று கூறப்பட்டாலும், காருக்குள் இருந்தவர் காவல்துறையினரின் கண்காணிப்பில் இருந்ததாகவும் பத்திரிக்கைகளில் செய்திகள் வந்துள்ளன. வெடித்து சிதறுண்டு வாகனத்திற்குள்ளும் சம்பவம் நடந்த இடத்திலும் ஆணிகளும், கோலி குண்டுகளும் சிதறிக் கிடந்ததாகவும், மேற்படி விபத்தில் உயிரிழந்த நபர் இதற்கு முன்பு தேசிய உளவுத்துறை முகமையால் விசாரணை செய்யபபட்டதாகவும், இறந்தவரின் இல்லத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் வெடிகுண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியத் துகள்கள், மரக்கரி போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.

காவல் துறை தலைமை இயக்குநர் அவர்களே சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்கிறார் என்றால் இதன் பின்னணியில் ஏதோ இருக்கிறது என்பது தெளிவாகிறது. மேலும் ஈது 1998 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் நடைபெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தை நினைவூட்டுகிறது.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இதைவிட ஒரு சிறந்த எடுத்துக்காட்டு தேவையில்லை. சட்டம் - ஒழுங்கை சீரழித்துக் கொண்டிருக்கிற திமுக அரசிற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

தீவிரவாதத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் அழிக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழ்நாடு காவல்துறைக்கு உள்ளது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சட்டம் - ஒழுங்கு பிரச்சனையில் உடனடியாக தனிக் கவனம் செலுத்தி, தமிழ்நாட்டை, தமிழ்நாடு மக்களை வன்முறையாளர்களிடமிருந்தும், தீவிரவாததிகளிடமிருந்தும், பயங்கரவாதிகளிடமிருந்தும் காப்பாற்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.