தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது - ஆளுநரிடம் இபிஎஸ் புகார்

ADMK AIADMK Edappadi K. Palaniswami
By Thahir Nov 23, 2022 08:53 AM GMT
Report

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் எடப்பாடி பழனிசாமி புகார் அளித்துள்ளார்.

ஆளுநரிடம் புகார் 

சென்னையில் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து புகார் அளித்தார்.

Law and order has broken down in Tamil Nadu - EPS

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக ஆளுநரிடம் புகாரளித்தேன். தமிழகத்தில் உளவுத்துறை செயலிழந்து இருக்கிறது.

உளவுத்துறை முன்கூட்டியே கண்டுபிடித்து இருந்தால் கோவை கார் வெடிப்பை தடுத்து இருக்கலாம். கோவை சம்பவத்தை தமிழக உளவுத்துறை சரியாக கையாளவில்லை.

திறமையற்ற அரசாக தமிழக அரசு உள்ளது 

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் வழக்கை காவல்துறை முறையாக விசாரணை செய்யவில்லை. பொம்மை முதல்வராக ஸ்டாலினும், திறமையற்ற அரசாக தமிழக அரசு இருக்கிறது.

நிர்வாக திறமையின்மை காரணமாக போதைப்பொருளை தமிழக அரசால் தடுக்க முடியவில்லை. அனைத்து துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

கமிஷன், கரப்ஷன், கலெக்‌ஷன் நிலவுகிறது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு எதிராக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்தை திமுக அரசு பறித்துவிட்டது.

அதிமுக ஆட்சியில் மருந்து தட்டுப்பாடு இல்லாமல் இருந்த நிலையில் திமுக ஆட்சியில் தட்டுப்பாடு உள்ளது. நம்ம ஊரு சூப்பரு என்ற விளம்பர பேனர் விநியோகத்தில் முறைகேடு நடந்துள்ளது.

ரூ.350 செலவாகும் பேனருக்கு ரூ.7,906 விலை நிர்ணயம் செய்து கணக்கு காட்டுகிறார்கள். தமிழகம் முழுவதும் டெண்டரே விடாமல் சட்டவிரோதமாக மதுபார்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மதுபான கொள்முதலில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. புகார்களை படித்துப்பார்த்தபிறகு உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதியளித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.