இறுதி போட்டியில் இந்த அணிதான் வெல்லும் - அடித்து சொல்லும் கெவின் பீட்டர்சன்
டி 20 உலகக்கோப்பை தொடரை ஆஸ்திரேலிய அணி வென்றால் அதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை என முன்னாள் இங்கிலாந்து வீரரான கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
டி.20 போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் துபாயில் துவங்கியது. இந்த தொடரின் லீக் சுற்றுகள் முடிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன.
இதில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணியும், பாகிஸ்தான் அணியை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
நியூசிலாந்து – ஆஸ்திரேலியா இடையேயான இறுதி போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை (14ம் தேதி) நடைபெற உள்ளது. இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இரு அணிகளுமே இதுவரை டி.20 உலகக்கோப்பையை வெல்லாததால், இந்த போட்டிக்காக ஒட்டுமொத்த ரசிகர்களும் இந்த போட்டிக்காக மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர்.
அதே போல் முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் இறுதி போட்டியில் எந்த அணி வெல்லும் என்பது குறித்தான தங்களது கணிப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி குறித்து பேசியுள்ள முன்னாள் இங்கிலாந்து வீரரான கெவின் பீட்டர்சன், ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றால் அதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை என தெரிவித்துள்ளார்.
இது குறித்து கெவின் பீட்டர்சன் பேசுகையில், யூசிலாந்து அணி அனைத்து வகையிலும் பலமான அணியாகவே உள்ளது. நியூசிலாந்து அணியில் பெரிய பலவீனம் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் ஆஸ்திரேலிய அணி அதிக ஆபத்தானது. இதற்கு முன்பு நடைபெற்ற பெரிய தொடரின் இறுதி போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி, நியூசிலாந்து அணியை ஈசியாக வீழ்த்தியுள்ளது என்றும்,
கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியிலும் இது தான் நடந்தது. எனவே என்னை பொறுத்தவரையில் டி.20 உலகக்கோப்பையை ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றால் அதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.