தோனிக்கு இதுதான் கடைசி வாய்ப்பு - என்ன செய்ய போகிறார்?
ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி, தனது பேட்டிங் திறனை மேம்படுத்த கடும் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
கொரோனா காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர், அமீரகத்தில் வரும் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்குகிறது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். நாளை இரவு 7:30 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.
இதனிடையே கடந்த 2020 சீசனிலும் சரி, இந்த சீசனிலும் சரி, சென்னை அணியின் ஒரே சொதப்பல் தோனியின் பேட்டிங் மட்டும் தான். அவர் களமிறங்கிய முக்கிய போட்டிகள் அனைத்திலும், துளி கூட பந்தை எதிர்கொள்ள முடியாமல், கடைசி வரை நின்று அணியை தோல்வியடைய வைத்தார் என சொல்லும் அளவுக்கு விமர்சனங்கள் எழுந்தது. 2008 முதல் ஐபிஎல்-ல் விளையாடி வரும் தோனி, சென்னை அணிக்காக ஒவ்வொரு ஆண்டும் அற்புதமாக விளையாடி வெற்றியை வசப்படுத்தினார்.
ஆனால் மஞ்சள் ஜெர்ஸியில் அவர் சொதப்பிய ஒரே சீசன் கடந்த 2020 சீசன் தான். 14 போட்டிகளில் விளையாடி வெறும் 200 ரன்களே அவர் எடுத்தார். அதனால், சென்னை அணி பிளே ஆஃப் முன்னேற முடியாமல் தொடரை விட்டே வெளியேறிவிட்டது. இந்த சீசனில் 7 போட்டிகளில் விளையாடியிருக்கும் தோனி 37 ரன்கள் எடுத்துள்ளார்.
இந்நிலையில், இப்போது மீண்டும் அவர் சொதப்பிய அதே அமீரக ஸ்டேடியங்களில் போட்டிகள் நடைபெற உள்ளது. இம்முறை தோனி நிச்சயம் தப்பிக்க முடியாது. ஒரு கேப்டனாக அணியை சிறப்பாக வழிநடத்துவது, ஒரு விக்கெட் கீப்பராக திறமையாக செயல்படுவது ஆகியவை மிக முக்கியம். சொல்லப்போனால் இது அவருக்கு கடைசி ஐபிஎல் தொடராக கூட இருக்கலாம். இதனை உணர்த்தும் வகையில் ஒருநாளைக்கு 3-4 மணி நேரம் பேட்டிங்கிற்கு என்று மட்டும் தோனி வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.