வெள்ளத்தில் மூழ்கிய பிரேசில் - அதிகரிக்கும் உயிரிழப்பு..!

brazillandslide heavyrainsaffectsbrazil deathratemounts
By Swetha Subash Feb 18, 2022 01:03 PM GMT
Swetha Subash

Swetha Subash

in இந்தியா
Report

பெரும் வெள்ளம் , நிலச்சரிவால் பெரும் பாதிப்புக்குள்ளானது பிரேசில்.

தென்அமெரிக்க நாடான பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ மாகாணத்தில் இரண்டு நாட்கள் முன் இடைவிடாது கனமழை கொட்டித்தீர்த்தது.

30 நாட்கள் பெய்ய வேண்டிய மழை வெறும் 3 மணி நேரத்தில் பெய்ததாக தெரிகிறது. இப்படி ஒரே நாளில் பெய்த பெரும் கன மழையால் அந்த மாகாணத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

மேலும் இந்த கனமழையால் அங்குள்ள மலைபிரதேசமான பெட்ரோபோலிஸ் பிராந்தியம் கடுமையான பாதிப்படைந்துள்ளது. தொடர் கனமழையால் அங்குள்ள பல்வேறு நகரங்களில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.

இதில் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. சாலைகளில் வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது.

மேலும் சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

நூற்றுக்கணக்கான கால்நடைகளும் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டன. அதே போல் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி நாசமாகின.

இதனிடையே கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக பெட்ரோபோலிஸ் பிராந்தியத்தின் பல இடங்களில் பயங்கரமான நிலச்சரிவுகள் ஏற்பட்டன.

இதில் ஏராளமான வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தன. இதை தொடர்ந்து வெள்ளம், நிலச்சரிவு பாதித்த பகுதிகளில் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டன.

நிலச்சரிவில் இருந்து 24 பேரைக் காப்பாற்றி உள்ளதாகவும், 439 க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 100 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட பகுதிளில் மீட்பு பணிகள் தொடர்ந்து வரும் நிலையில், பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.