பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் - பெண் போலீஸை கொலை செய்த சகோதரர்
பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்த பெண் போலீஸை அவரது சகோதரர் கொலை செய்துள்ளார்.
காதலுக்கு எதிர்ப்பு
தெலுங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டம், இப்ராஹிம்பட்டினம் மண்டலத்தை சேர்ந்த நாகமணி, ஹயத்நகர் காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்துள்ளார்.
இவர் வேறு சமுதாயத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் இவரின் காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
பெண் காவலர் கொலை
இதனையடுத்து, கடந்த 15 நாட்களுக்கு முன்பு அவர் ஸ்ரீகாந்தை பதிவு திருமணம் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ராயபோல் பகுதியில் இருந்து மன்னேகுடா நோக்கி நாகமணி தனது ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த போது அவரது சகோதரர் பரமேஷ், காரை வைத்து ஸ்கூட்டர் மீது மோதியுள்ளார்.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த நாகமணியை அவரது சகோதரர் பரமேஷ் சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு தப்பியோடியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த நாகமணி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நாகமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில்வேறு சமூகத்தை சார்நதவரை பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டதால் அவரது சகோதரர், அவரை ஆணவக் கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. தலைமறைவாக உள்ள பரமேஷை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.