செல்போனில் பேசி கொண்டிருந்த மனைவி வெட்டிக்கொலை
கிண்டியில் தொடர்ந்து செல்போனில் பேசி கொண்டிருந்த மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை கிண்டி லேபர் காலனியை சேர்ந்த லோடு வேன் ஓட்டுனர் நித்தியானந்தம் என்பவர் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு தனது நெருங்கிய நண்பரின் சகோதரியான புவனேஷ்வரி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இதனிடையே புவனேஷ்வரி வீட்டில் முறையாக வேலை செய்யாமல் தொடர்ந்து தனது அக்காவின் கணவர் உட்பட சிலரிடம் செல்போன் பேசி வந்துள்ளார். மேலும் பல முறை நித்தியானந்தன் புவனேஷ்வரியின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது பிஸியாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்து நித்தியானந்தன் பல முறை புவனேஷ்வரியிடம் செல்போன் பேசுவதை தவிர்க்குமாறு கண்டித்துள்ளார்.ஆனால் தொடர்ந்து புவனேஷ்வரி செல்போன் பேசி கொண்டிருந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த நித்யானந்தன் நேற்று புவனேஷ்வரி செல்போனில் பேசி கொண்டிருந்த போது அருகிலிருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து கழுத்து உட்பட பல இடங்களில் சரமாரியாக வெட்டி கொலை செய்தார்.இது குறித்து உடனடியாக தனது நண்பருக்கு போன் செய்து தங்கையை கொன்றுவிட்டதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் நேராக கிண்டி காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார்.இதனையடுத்து கிண்டி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து இறந்த புவனேஷ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக நித்தியானந்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.