அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனை சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி

By Petchi Avudaiappan May 31, 2022 07:01 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

சேலத்தில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனை சென்ற பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் பகுதியை அடுத்த சவுரியூர் பகுதியைச் சேர்ந்த பூபதி-சங்கீதா தம்பதியினருக்கு 11 வயதில் ஒரு பெண் குழந்தையும், 7 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இவர்கள் விசைத் றி தொழிலாளிகளாக உள்ள நிலையில் சங்கீதாவிற்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வதற்காக கடந்த 20 நாட்களுக்கு முன்பு சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள தனியார் (அரவிந்த்) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய ஒரு வாரம் கழித்து சங்கீதாவுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மீண்டும் அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அப்போது பரிசோதனை செய்து பார்த்து வயிற்றில் ரத்தம் கட்டி உள்ளது என்று கூறி மருத்துவர்கள், 2வது முறையாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே  கடந்த மே 29 ஆம் தேதி சங்கீதாவிற்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மூன்றாவது முறையாக அறுவை சிகிச்சை செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி சங்கீதா பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவலறிந்த சங்கீதாவின் உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்து அவரது உடலை வாங்காமல் டாக்டரை கைது செய்யக்கோரி மருத்துவமனை முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் மருத்துவமனையின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர்கள் ஆனந்தன், சந்திரலேகா தலைமையில் போலீசார் மற்றும் வருவாய் ஆய்வாளர் முருகேசன், கிராம நிர்வாக அலுவலர் பாபு ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த மருத்துவமனையில் இதுபோன்று தவறான சிகிச்சையால் அடிக்கடி பலர் உயிரிழந்திருப்பதாகவும், இந்த மருத்தவமனை தொடர்ந்து இயங்க அனுமதிக்க கூடாது எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து விசாரணை நடத்திய அதிகாரிகள் மருத்துவமனைக்கு சீல் வைத்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.