மெரினா விவகாரம் என்னாச்சு.. ரயில் விபத்தில் நாடகமாடும் திமுக - எல்.முருகன் அட்டாக்!
மெரினாவில் 5 பேர் உயிரிழந்த சம்பவத்தை மறைப்பதற்காக ரயில் விபத்தில் திமுக நாடகமாடி வருவதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
எல்.முருகன்
மதுரையில் பல்வேறு இடங்களில் பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று (அக்.13) நடைபெற்றது. இதில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,’’மக்கள் பேராதாரவுடன் பாஜக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இது அக்.15 வரை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெறும். பாஜக உறுப்பினர்கள் எண்ணிக்கையை 11 கோடியாக உயர்த்த வேண்டும் என்ற இலக்குடன் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. பாஜகவில் நடைபெறுவது போல் வேறு எந்தக்கட்சியிலும் ஜனநாயக முறைப்படி உறுப்பினர் சேர்க்கை நடைபெறவில்லை என்று கூறினார்.
அப்போது கவரப்பேட்டை ரயில் விபத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு மெரினாவில் 5 பேர் உயிரிழந்தார்கள். அதுகுறித்து கூட்டணி கட்சியினர் பேசினார்களா என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசியவர் ,’’மெரினா சம்பவத்தை மறைக்க திமுக ரயில் விபத்தில் நாடகமாடி வருகின்றனர்.
திமுகவின் நாடகம்
கவரப்பேட்டை ரயில் விபத்து குறித்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், ஒட்டுமொத்த ரயில்வேயும் வேலை செய்யவில்லை என திமுக இந்தியா கூட்டணி மாயத் தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்கின்றனர்.
மெரினா நிகழ்ச்சியில் என்ன நடவடிக்கை எடுத்தது, இதற்காக மெரினாவில் ரயில், பேருந்து வசதி செய்து கொடுக்கவில்லை. தண்ணீர், ஆம்புலன்ஸ் இல்லாமல் 5 பேர் உயிரிழந்தனர். இதற்காகத் தனி விசாரணையை நடத்தத் தேவையில்லை.
திமுகவின் மூன்றரை ஆண்டுக்கால ஆட்சி இது முழுக்க முழுக்க வேதனையான ஆட்சி. தமிழர்கள் ஒவ்வொருவரும் வேதனைப்படும் ஆட்சியாக இது அமைந்துள்ளது என்று கூறினார்.