பாபர் மசூதி வழக்கு - அத்வானியை விடுதலை செய்த நீதிபதிக்கு கிடைத்த பேரதிஷ்டம்!

politics Giving promotions
By Nandhini Apr 13, 2021 10:25 AM GMT
Report

அயோத்தியில் பாபர் மசூதி 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி இந்து கர சேவகர்களால் இடிக்கப்பட்டது. அப்போது, விஷ்வ ஹிந்து பரிஷத், ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங் (ஆர்.எஸ்.எஸ்) பாரதிய ஜனதா கட்சி, சிவசேனை உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் நடத்திய பேரணிக்காக அங்கு லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஒன்று கூடினர்.

அவர்களைத் தூண்டிவிட்டு மசூதியை இடிக்கச் சதி செய்ததாகவும், சமூகக் குழுக்களுக்கு இடையே மோதலை உருவாக்கியதாகவும் குற்றச்சாட்டப்பட்டு எல்.கே. அத்வானி மற்றும், முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட இந்துத்துவ தலைவர்கள் 48 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணையின்போதே 16 தலைவர்கள் இறந்துவிட்டனர். மீதம் 32 பேர் மீது விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்குகளை விசாரித்தவர் நீதிபதி சுரேந்திர குமார் யாதவ். இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பை வாசித்தார். அதில், 32 பேரும் குற்றமற்றவர்கள் என்றும், சிபிஐ ஆதாரங்கள் வலுவாக இல்லை என தீர்ப்பளித்து விடுதலை செய்தார். இதனால் பெரும் பரபரப்பும், சர்ச்சையும் கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து சமீபத்தில் நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் ஓய்வுபெற்றார். இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநில லோக் ஆயுக்தாவில் துணை தலைவராக சுரேந்திர யாதவ் நியமிக்கப்பட்டிருக்கிறார். பல்வேறு அரசு அதிகாரிகள் முன்னிலையில் அவர் தற்போது பதவியேற்றுக் கொண்டார். அடுத்த 6 ஆண்டுகளுக்கு இவர் இந்தப் பதவியை வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.