கோடங்கி வேடத்தில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்! வேலூரில் நிகழ்ந்த சுவாரஸ்ய சம்பவம்
திமுகவுக்கு வாக்களிக்குமாறு குடுகுடுப்பைக்காரர் வேடத்தில் வாக்கு சேகரித்த திமுக தொண்டரின் செயல் திமுகவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுபவர் நந்தகுமார். அவரை எதிர்த்து அதிமுகவைச் சேர்ந்த வேளாளர் என்பவர் போட்டியிடுகிறார்.
மேலும் பல்வேறு கட்சியினரும் சுயேட்சை வேட்பாளர்களும் அத்தொகுதியில் போட்டியிடுகின்றனர். திமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள நந்தகுமார் கடந்த தேர்தலில் அணைக்கட்டு தொகுதியில் நின்று வெற்றி பெற்றவர். இந்நிலையில் இரண்டு கட்சி வேட்பாளர்களும் பல்வேறு இடங்களில் பொது மக்களிடம் சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திமுகவைச் சேர்ந்த தொண்டர் ஒருவர் குடுகுடுப்பைக்காரர் வேடமணிந்து அணைக்கட்டு தொகுதியில் வீதி வீதியாகச் சென்று நந்தகுமாருக்கு ஓட்டு போட்டால் நல்ல காலம் பிறக்கும் என்று கூறி வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இந்த புது விதமான பிரச்சாரம் பலரிடமும் கவனம் பெற்றுள்ளது.