தேர்தல் விதிமுறை மீறல்- நடிகை குஷ்பு மீது வழக்குப்பதிவு
தமிழக மக்கள் எதிர்பார்த்த சட்டமன்றத் தேர்தல் கடந்த 6ம் தேதி நடைபெற்று முடிவடைந்தது. வாக்குச்சாவடியில் வாக்களிக்க வரும் போது விதிமுறைகளை மீறி உதயநிதி ஸ்டாலின் சட்டையிலும், வானதி சீனிவாசன் சேலையிலும் கட்சிக் கொடியை குத்தி வந்ததாக சர்ச்சை உருவானது. இது குறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்று அறிவித்தது.
அந்த வகையில், கட்சி கொடியுடன் வாக்குபதிவு மையத்துக்கு காரில் சென்று தேர்தல் விதி முறைகளை மீறியதாக நடிகை குஷ்பு மீது பட்டினப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.
சட்டப்பேரவை தேர்தல் வாக்குப் பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. சென்னை மந்தைவெளியில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகையும், ஆயிரம் விளக்கு பாஜக வேட்பாளருமான குஷ்பு தனது வாக்கை பதிவு செய்தார். அப்போது, தனது காரில் பாஜக கொடியுடன் வாக்குச்சாவடிக்கு சென்றதாக சொல்லப்படுகிறது.

இதனையடுத்து, இது சம்பந்தமாக பட்டினப்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக குஷ்பு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே தேர்தல் பிரச்சாரத்தின்போது விதிமுறைகளை மீறியதாக நடிகை குஷ்பு மீது கோடம்பாக்கம் போலீஸார், சட்டவிரோதமாக கூடுதல், அரசு அதிகாரியின் உத்தரவை மீறி செயல்படுதல் ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.