ஏன் இந்த திடீர் ஞானோதயம்!முதலமைச்சர் மீது நடிகை குஷ்பு காட்டம்..
நேற்றைய தினம் முதல்வர் ஸ்டாலின் சட்டசபை கூட்டத்தொடரில் "ஒன்றியம் என்ற சொல் தவறான சொல் அல்ல. ஒன்றியம் என்ற வார்த்தையில் கூட்டாட்சி தத்துவம் அடங்கி உள்ளது. அரசியலமைப்பு சட்டத்திலும் ஒன்றியம் என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளன. எனவே ஒன்றியம் என்ற வார்த்தையை கண்டு யாரும் மிரள வேண்டாம். ஒன்றிய அரசு என்ற சொல்லையே பயன்படுத்துவோம்" என அழுத்தமாக விளக்கமளித்தார்.

இதற்கு பதில் அளித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் எல் முருகன்; ஒன்றியங்கள் சேர்ந்தது மத்திய அரசு என்றால் இனி முதல்வரை ஒன்றிய முதல்வர் என்றுதான் அழைப்போம் என தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து பாஜக நிர்வாகியான குஷ்பு ஸ்டாலினின் கருத்துக்கு ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது திமுக எம்பிக்கள் சிலரும் மத்திய அமைச்சர்களாக்கப்பட்டனர். இவர்களை மத்திய அமைச்சர்கள் என்ற பெருமையுடன் திமுக அழைத்தது.
ஏன் அப்போதே ஒன்றிய அமைச்சர்கள் என அழைக்க வேண்டியதுதானே? இப்போது ஒன்றிய அரசு என அழைக்க ஞானம் வந்த போது மத்தியில், அமைச்சரவையில் திமுக இடம் பெற்றிருந்த போது தூங்கிக் கொண்டிருந்ததா? எங்களுக்கு தெரிய வேண்டியதெல்லாம் ஒன்றுதான். ஒன்றிய அரசு என அழைப்பதன் பின்னணியில் உள்ள நோக்கம்தான் என்ன? நம் நாட்டை இந்தியா அல்லது பாரதம் என்றுதானே அழைக்கிறோம், பல மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் இருக்கிறது என்பதால் இந்திய குடியரசு என்றா அழைக்கிறோம்? மே 2ஆம் தேதிக்கு பிறகு ஏன் இந்த திடீர் ஞானோதயம் என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
Let #CM @mkstalin avl call Bharat or India by its real name, #RepublicofIndia ,if so concerned about being politically n lawfully correct. Isn't that term used in all govt documents lawfully? Why this sudden enlightment after 2nd May? What is the ulterior motive behind this?
— KhushbuSundar ❤️ (@khushsundar) June 23, 2021