நான் பணம், புகழுக்காக அரசியலுக்கு வரவில்லை - மனம் திறந்து பேசிய குஷ்பு!
எனது கடுமையான உழைப்பை அங்கீகரித்து அதற்கு பரிசாக பாரதிய ஜனதா மக்களுக்கு சேவை செய்ய இந்த வாய்ப்பை அளித்துள்ளது. நான் பணம், புகழுக்காக அரசியலுக்கு வரவில்லை. நான் கடுமையாக உழைப்பதுடன், வித்தியாசமாக செயல்படுவேன் என்பதை அவர்கள் நம்புகிறார்கள் என பாரதிய ஜனதா வேட்பாளராக போட்டியிடும் நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் நடிகை குஷ்பு பேசியதாவது, "மத்திய அமைச்சரவையிலும் பெண்களுக்கு போதிய இடத்தை பாரதிய ஜனதா அளித்திருக்கிறது. இந்த தொகுதியை பொறுத்தவரையில் வசதி படைத்தவர்கள், ஏழைகள் என பலதரப்பட்ட மக்களும் இருக்கிறார்கள். குடிசை பகுதிகளை பொறுத்தவரை தெருத்தெருவாக சென்று அவர்கள் நம்பிக்கையை பெறுவேன். என்னை பொறுத்தவரையில் அனைத்து தரப்பு மக்களும் வந்து ஓட்டளிக்க வேண்டும்.
60 முதல் 70 சதவீதம் பேர்தான் ஓட்டு போடுகிறார்கள். 90 சதவீதம் பேர் ஓட்டு போடுவதை பார்க்க வேண்டும். 20 முதல் 30 சதவீதம் பேர் ஓட்டு போடாமல் இருப்பது கவலை அளிக்கிறது. நான் எப்போதுமே வெளிப்படையாகவும், நேர்மையாகவும் செயல்படுவேன். நான் நானாகவே எப்போதும் இருப்பேன். இதன் மூலம் மக்களின் நம்பிக்கையை பெற்று வெற்றி பெறுவேன்.
எனது கடுமையான உழைப்பை அங்கீகரித்து அதற்கு பரிசாக பாரதிய ஜனதா மக்களுக்கு சேவை செய்ய இந்த வாய்ப்பை அளித்துள்ளது. நான் பணம், புகழுக்காக அரசியலுக்கு வரவில்லை. நான் கடுமையாக உழைப்பதுடன், வித்தியாசமாக செயல்படுவேன்.

பெண்கள் அரசியலுக்கு வருவது குறைவாக இருக்கிறது. குறிப்பாக அடிமட்ட நிலையில் உள்ள மக்கள் அரசியலுக்கு வருவது கிடையாது. பெண்கள் அரசியலுக்கு வருவதை மக்கள் விரும்பவில்லை என்று சொல்ல முடியாது. ஜெயலலிதாவை பலமுறை மக்கள் தேர்வு செய்தார்கள். மக்களின் நம்பிக்கையை பெற்றால் அவர்கள் பெண்களை வரவேற்பார்கள்.
பாரதிய ஜனதாவை பொறுத்தவரை தகுதி உள்ளவர்களுக்கும், வெற்றி பெற வாய்ப்பு உள்ளவர்களுக்கும் மட்டும்தான் டிக்கெட் கொடுக்க வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.
ஆந்திராவில் சிரஞ்சீவி மிகப்பெரிய நட்சத்திரமாக இருந்தார். ஆனால் அவரால் அரசியலில் நீடிக்க முடியவில்லை. மக்களை பொறுத்தவரை சினிமாவையும், அரசியலையும் தெளிவாக வேறுபடுத்தி பார்க்கிறார்கள் என்றார்.