மகளின் திருமணத்துக்கு முதலமைச்சர் விஜயை குடும்பத்துடன் சென்று அழைத்த குஷ்பு - உருக்கமான பதிவு
நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பூ சுந்தர், தனது குடும்பத்தினருடன் தமிழக முதலமைச்சர் விஜயை அவரது இல்லத்தில் சந்தித்து, தனது மகள் அவந்திகாவின் திருமண அழைப்பிதழை வழங்கியுள்ளார்.
குஷ்பூ சுந்தர், அவரது கணவர் சுந்தர் சி, மகள்கள் அவந்திகா மற்றும் ஆனந்திதா, மேலும் வருங்கால மருமகன் ஸ்ரவன் ஸ்ரீனிவாசன் ஆகியோர் முதலமைச்சரை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தனது சமூக வலைதளப் பதிவில் குஷ்பூ கூறியதாவது: "எனது அன்புச் சகோதரரும், தமிழகத்தின் மாண்புமிகு முதலமைச்சருமான திரு விஜயை அவரது இல்லத்தில் சந்தித்து, எங்கள் மகள் அவந்திகா மற்றும் திரு ஸ்ரவன் ஸ்ரீனிவாசன் ஆகியோரின் திருமணத்திற்கு அழைப்பிதழை வழங்கிய நாள், எங்கள் குடும்பத்திற்கு மறக்க முடியாத ஒரு சிறப்பான தருணமாக அமைந்தது.
அவரைச் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் எங்கள் மனங்கள் பெருமையாலும் மகிழ்ச்சியாலும் நிரம்புகின்றன. குழந்தைகள் மிகவும் உற்சாகமடைந்தனர்; அவரிடமிருந்து தங்கள் பார்வையைப் பிரிக்கவே முடியவில்லை.
பணிச்சுமை மிகுந்த நேரத்திலும், நாங்கள் எப்போதும் அறிந்த அதே அன்பு, அரவணைப்பு மற்றும் இனிய புன்னகையுடன் அவர் எங்களை வரவேற்றார்.

என் சகோதரனே, உங்களின் பொன்னான நேரம், அன்பு மற்றும் ஆசீர்வாதங்களுக்கு மனமார்ந்த நன்றி.அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. உங்களை எப்போதும் நேசிக்கிறேன்," என்று பதிவிட்டுள்ளார்.
இந்தப் பதிவுடன் பகிரப்பட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, இணையத்தில் வைரலாகி வருகின்றன.