குறிஞ்சாக்குளம் கிராமத்தின் கதை ..!
காந்தாரி அம்மன் என்ன பிரச்சனை? ஏன் போராட்டம்?
தென்காசி மாவட்டம் குறிஞ்சாக்குளம் காந்தாரியம்மன் கோயில் வழிபாட்டு உரிமை பிரச்சனையில் உயிரிழந்த நான்கு பேருக்கு நடுகல் வழிபாடு செய்யவும்,
காந்தாரியம்மன் சிலை அடிக்கல் நாட்டிற்காகவும் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்தார் திரைப்பட இயக்குனரும் , தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளருமான வ.கௌதமன்.
அவரை காவல் துறையினர் கைது செய்தனர். காந்தாரியம்மன் கோயில் பிரச்சனை என்ன? விவரிக்கிறது தொகுப்பு:
தென்காசி மாவட்டத்தில் உள்ள கிராமம்தான் குறிஞ்சாங்குளம், இந்த கிராமத்தில் கடந்த 1992-ல் பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள், காந்தாரியம்மன் கோயில் கட்ட முயன்றனர்.
கோயில் கட்ட முயன்ற போது இடமானது, மாற்று சமூகத்தினரின் மண்டபத்திற்கு எதிரே இருந்ததால் மாற்று சமூகத்தினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இது தொடர்பான தகராறில் பட்டியலினத்தைச் சேர்ந்த சர்க்கரை, சுப்பையா, அம்பிகாபதி, அன்பு என்ற நான்கு பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர்.
அதன் பிறகு கோவில் எழுப்பப்படாமல் அந்த இடம் பாழடைந்து விட்டது. காந்தாரி அம்மன் சிலையை சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் அடைத்து வைத்தனர்.
இதுவரை அந்த சிலை வெளியே கொண்டு வரப்படவில்லை. குறிஞ்சாங்குளம் படுகொலை தொடர்பாக 26 பேர் மீது வழக்குத் தொடரப்பட்ட போதிலும், அனைவரும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.
குறிஞ்சான்குளம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் 26 பேரும் விடுவிக்கப்பட்டனர், இவர்களுக்காக வழக்கினை நடத்தியவர் அப்போது மதிமுகவின் நெருக்கமான நண்பர்.
தற்போது திமுகவின் செய்தி தொடர்பாளர். மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வைகோவின் தம்பி ராமச்சந்திரன் பகிரங்கமாகவே செயல்பட்டார் என்ற குற்றம் சாட்டும் உள்ளது.
இச்சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு குறிஞ்சாங்குளம் எனும் பெயரில் குறும்படம் தயாரித்து, தமிழர் திரைக்களம் எனும் பெயரில் இணையத்தில் வெளியிட்டமைக்காக ஐவரை, 22 செப்டம்பர் 2016 அன்று காவல்துறையால் கைது செய்து செய்யப்பட்டனர்.
தற்சமயம் கிராமம் பற்றியும் அங்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஒரு சமுதாயத்தின் தலைவரிடம் சங்கரன்கோயில் டி.எஸ்.பி-யாக இருந்த ஜாஹீர் உசேன் பேசும் ஆடியோ வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
அதில் பேசும் ஜாஹீர் உசேன், ஒரு தரப்பு சமூகத்தினரையும், அதன் தலைவரையும் அவதூறாகவும், ஆபாசமான வார்த்தையாலும் திட்டுகிறார்.
அவர் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால் அவர்மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கும் வகையில் உடனடியாகக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு சென்னைக்கு அழைக்கப்பட்டார்.
அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதும், குறிஞ்சாங்குளம் விவகாரம் தொடர்பாக குறிப்பிட்ட சாதித் தலைவரிடம் டி.எஸ்.பி ஜாஹீர் உசேன் பேசி மன்னிப்புக் கேட்டுள்ளார்.
30வருடத்திற்கு மேலாக உள்ள இந்த பிரச்சனைக்கான தீர்வாக , ஒரு பொதுவான இடத்தில் சிலையை அமைத்துத் தரக் கோரி ஒரு தரப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சில அரசியல் கட்சியினர் அந்த விவகாரத்தை சாதிய பிரச்னையாக மாற்ற முயல்வதாக காவல்துறையினர் குற்றம்சாட்டுகிறார்கள்.
இந்த நிலையில், நேற்று மார்ச் 14-ம் தேதி சர்ச்சைக்குரிய பொது இடத்தில் காந்தாரியம்மன் சிலையை நிறுவப்போவதாக சில சமுதாய அமைப்பினரும், அரசியல் இயக்கத்தினரும் அறிவித்ததால் பதற்றம் நிலவியது.
அதனால் அந்தப் பகுதியில் காவல்துறை தனது படைகளை குவித்தனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து வந்த வ.கௌதமன் காவல்துறையினரால் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக அரசு இதில் தலையிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
2016 தேர்தலில் சீமான் காந்தாரியம்மனுக்கு கோயில் கட்டுவோம் என அறிக்கையே விட்டிருந்தார்.
இந்து மக்களின் கோயில்களுக்காக போராடும் இந்து முன்னணி அமைப்பினரோ, அரசு அதிகாரங்களை கையில் வைத்திருந்த திமுக அதிமுக அரசுகளோ இவர்களுக்காக ஒன்றும் செய்யவில்லை என்பதே பாதிக்கப்பட்ட மக்களின் ஒருமித்த கருத்தாக இருந்து வருகிறது.
ஆனாலும் இந்த பிரச்சனை அரசியலுக்கு அப்பாற்பட்டு தீர்வை நோக்கி நகரவேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.