திருட சென்ற வீட்டில் ஒன்றுமில்லாததால் இளம்பெண்ணை பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம்!
கொள்ளையடிக்கச் சென்ற வீட்டில் பொருட்கள் இல்லாததால் இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்த திருடனை போலீசார் கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரை அடுத்த கோவூர் பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர், தனது தாய் மற்றும் சகோதரியுடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு தந்தை இல்லை.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது தாயாரும், சகோதரியும் வெளியூர் சென்றுவிட்ட நிலையில், அந்த இளம் பெண் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அப்போது, நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் திருட வந்துள்ளார். ஆனால், வீட்டில் திருடும் அளவுக்கு எந்த பொருட்களும் இல்லாததால் ஆத்திரமடைந்த திருடன் வீட்டில் தனியாக இருந்த இளம் பெண்ணை தாக்கி பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
இதனையடுத்து, அந்த திருடன் அங்கிருந்து தப்பி சென்ற நிலையில், கடும் அதிர்ச்சியடைந்த இளம்பெண் குன்றத்தூர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார்.
இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளின் புகைப்படங்களை வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். அவ்வாறு சேகரிக்கப்பட்ட புகைப்படங்களை பாதிக்கப்பட்ட பெண்ணிடம் காண்பித்தபோது குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை பகுதியை சேர்ந்த சதீஷ் (19), என்பவரின் புகைப்படத்தை அந்த பெண் உறுதி செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து சதீஷை குன்றத்தூர் போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலை பகுதியில் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில் கஞ்சா போதையில் இருந்த திருடன் அங்கேயே தூங்கிவிட்டு அதிகாலையில் தப்பித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
திருட ஒன்றுமில்லாததால் இளம்பெண்ணை திருடன் ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.