கும்பமேளாவில் கலந்து கொண்ட 1,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.! அச்சத்தில் மக்கள்
உத்தராகண்ட் மாநிலம், ஹரித்வாரின்ல்,12 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா நிகழ்ச்சி கடந்த 1-ம் தேதி தொடங்கியது.
இதில் இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் கலந்து கொள்வார்கள். ஆனால் தற்போது இந்தியாவில் கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. நேற்று இதுவரை இல்லாத அளவிற்கு 2 லட்சத்திற்கும் அதிகமான பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
இத்தகைய சூழ்நிலையில் கும்ப மேளா நிகழ்வை ரத்து செய்யுமாறு பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் எழுந்தது.
ஆனால், கொரோனா கட்டுப்பாடுகளுடன் இந்த நிகழ்வு நடைபெறும் என்று உத்தரகாண்ட் அரசு அறிவித்தது.
இந்த நிகழ்விற்கு வரும் அனைவரும் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் வைத்திருக்க வேண்டும், முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற கொரோனா விதிமுறைகளை பின்பற்றுமாறு அரசு உத்தரவிட்டிருந்தது.
ஆனால், கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அங்கு கூட்டம் கூடியதால், இந்த கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகள் எல்லாம் காற்றில் பறக்க விடப்பட்டது.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில், கடந்த 2 நாட்களில் மட்டும் 1,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு நடைபெற்ற பகுதியில், நாளொன்றுக்கு 50,000 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள்அதிகரித்து வருகின்ற நிலையில் கும்பமேளா நிகழ்வு மூலம் இனிவரும் நாட்களில் மேலும் பரவல் அதிகமாகும் என மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.