கும்ப மேளாவில் பெண்கள் குளிக்கும் வீடியோ இணையத்தில் விற்பனை - அதிர வைக்கும் தகவல்
கும்ப மேளாவில் பெண்கள் குளிக்கும் வீடியோ சமூகவலைத்தளத்தில் விற்பனை செய்யப்படுவதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.
கும்பமேளா
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் நடைபெறும் கும்பமேளா நிகழ்வு, உத்திரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 26 வரை நடைபெற உள்ளது.
தற்போது வரை பிரதமர் மோடி உட்பட நாடு முழுவதும் இருந்து 56 கோடி பேர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு புனித நீராடியுள்ளனர். இந்த நிகழ்வின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
அசுத்த நீர்
சமீபத்தில் இந்த நீரில் கோடிக்கணக்கான மக்கள் நீராடியதால் மனித கழிவு கலந்துள்ளது, இதனால் ‘ஃபீக்கல் கோலிஃபார்ம்’ என்னும் பாக்டீரியாக்களால் நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இந்த நீர் குளிக்க உகந்தது இல்லை என மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திடம் அறிக்கை சமர்ப்பித்தது.
"ஆனால் பிரயாக்ராஜ் ஆற்று நீர் குளிப்பதற்கு ஏற்றது தான். குடிக்கவும் செய்யலாம். இதுபோன்ற அறிக்கைகள், மகா கும்பமேளாவை அவமதிக்கும் பிரசாரம்" என உத்திரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
குளிக்கும் வீடியோ
இதற்கிடையில், மகா கும்பமேளாவில் பெண்கள் நீராடுவதையும், உடைமாற்றுவதையும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களாக எடுத்து அதை சமூகவலைத்தளங்களில் விற்றுவருவதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. இந்த வீடியோக்கள் உள்ள டெலிகிராம் குழுவை அணுக ரூ.2000 முதல் 3000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
கும்பமேளாவிற்கு புனித நீராட வந்த பெண்களின் கௌரவத்தைப் பாதுகாக்க பாஜக அரசு தவறிவிட்டதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார்.
இந்த வீடியோக்களை பகிர்ந்த இன்ஸ்டாகிராம் கணக்கு ஒன்று மீது உத்திரப் பிரதேச காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. வீடியோவை பகிர்ந்த மற்றும் வாங்கியவர்களுக்கு கைது செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பயனர்கள் குறித்த தகவல்களை மெட்டா நிறுவனத்திடம் கேட்டுள்ளதாகவும் அதன் பின்னர் கைது நடவடிக்கை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.