இட்லியில் இருந்த தவளை - வாடிக்கையாளர் அதிர்ச்சி
கும்பகோணம் அருகே இட்லியில் தவளை இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் மாடாகுடி பகுதியை சேர்ந்த முருகேசனின் உறவினர் ஒருவர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவருக்கு தேவையான உதவிகளை முருகேசன் உடனிருந்து செய்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை கும்பகோணம் அரசு மருத்துவமனை சாலையில் அமைந்துள்ள தனியார் ஹோட்டலில் இருந்து இட்லியை பார்சலாக வாங்கி வந்துள்ளார். அந்த பார்சலை பிரித்து இட்லியை சாப்பிட முயன்ற போது, அதில் இறந்த தவளை இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இது குறித்து அவர் உணவக உரிமையாளரிடம் புகார் அளித்ததை தொடர்ந்து உணவக உரிமையாளர் முருகேசன் வாங்கிய இட்லிக்கு உண்டான பணத்தை திருப்பி கொடுத்துள்ளார், மேலும் இட்லி ஊத்த வைத்திருந்த மாவையும் கீழே ஊற்றியுள்ளார்.
பிரச்சனை பெரிதாக மாறுவதை உணர்ந்த உரிமையாளர் உடனடியாக உணவகத்தை மூடிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இந்த சம்பவத்தை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடவே அது வேகமாக பரவி வருகிறது.
மக்கள் மற்றும் நோயாளிகள் சாப்பிடும் உணவை இதுபோல் அஜாக்கிரதையாக சமைத்த உணவக உரிமையாளருக்கு அபராதம் விதிக்கவும், உணவகத்தை மூடி சீல் வைக்க வேண்டும் எனவும் நகராட்சி சுகாதார துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.